மாணவர்களுக்கு விழிப்புணர்வு: எழும்பூர் அருங்காட்சியகத்தில் புதிதாக அணு உலை மாதிரி - முதன்மை செயலாளர் திறந்து வைத்தார்
மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எழும்பூர் அருங்காட்சியகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அணு உலை மாதிரியை அரசின் முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன் நேற்று திறந்து வைத்தார்.
மத்திய அரசின் அணு ஆராய்ச்சி அறிவியல் சார்ந்த ஒரு முன்னிலை நிறுவனம், ரூ.10 லட்சம் மதிப்பிலான அணு சக்தி மூலம் 700 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அணு உலையின் மாதிரியை, சென்னை, எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்துக்கு தானமாக வழங்கியது. இதற்காக நடந்த விழாவுக்கு தமிழக அருங்காட்சியகம் துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார்.
உலையின் மாதிரி தானமாக வழங்கியதற்கான உத்தரவை, அணுசக்தி கழக நிறுவனத்தின் துணை பொதுமேலாளர் அமிர்தேஷ் ஸ்ரீவத்சவா, தமிழக சுற்றுலா, கலாசாரம் மற்றும் அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகனிடம் வழங்கினார். அவர் அதனை திறந்து வைத்து பேசியதாவது:-
மின்சார உற்பத்தி அதிகரிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேம்படும். இதனை மையமாக வைத்து பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அந்தவகையில் தற்போது மும்பையை சேர்ந்த நிறுவனம் அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான அணு உலை மாதிரியை மாணவர்கள் விழிப்புணர்வு பெறுவதற்காக அருங்காட்சியகத்திற்கு வழங்கி உள்ளது. இதனை எழும்பூரில் உள்ள குழந்தைகளுக்கான அருங்காட்சியகத்தில் வைக்கப்படுகிறது. இது செயல்படும் வீதம் குறித்து, தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய 3 மொழிகளில் ஆடியோவாக பார்வையாளர்கள் கேட்க முடியும்.
விழுப்புரம், ராமநாதபுரத்தில் தலா ரூ.5 கோடியில் புதிதாக அருங்காட்சியகம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல் எழும்பூர் அருங்காட்சியகத்தில் வெண்கலத்தால் ஆன சிலைகள் உள்ள கட்டிடம் ரூ.7 கோடி மதிப்பில் சீரமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது. அதேபோல், அருங்காட்சியகத்தில் உள்ள திரையரங்கம் ரூ.3 கோடி மதிப்பிலும் நவீனப்படுத்தப்பட உள்ளது.
காஞ்சீபுரம், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள அருங்காட்சியம் இடமாற்றம் செய்வது, எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள வேதியியல் ஆய்வுக்கூடம் ரூ.50 லட்சத்தில் தரம் உயர்த்தப்படுகிறது. அதேபோல ரூ.45 லட்சம் செலவில் சுற்றுசுவர் அமைக்கப்படுகிறது. சர்வதேச தரத்தில் தொல்பொருள் பிரிவு ரூ.22.81 கோடியில் மேம்படுத்தப்படும். மதுரை காந்தி அருங்காட்சியகம் ரூ.6 கோடி செலவில் நவீனப்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக உதவி இயக்குனர் ஆர்.பி.துளசி பிருந்தா வரவேற்றார். நிகழ்ச்சியில் புதிய கல்லூரி, காயிதே மில்லத் கல்லூரி, சென்னை பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். புத்தொழி பயிலரங்கில் கலந்து கொண்ட மாணவர்களில் 5 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. அருங்காட்சியக கல்வி அலுவலர் ஜி.காளத்தி நன்றி கூறினார்.