பேரிடர் மேலாண்மை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

பொள்ளாச்சியில் வருவாய் துறை சார்பில் பேரிடர் மேலாண்மை குறித்து மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2022-06-28 16:23 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் வருவாய் துறை சார்பில் பேரிடர் மேலாண்மை குறித்து மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

விழிப்புணர்வு பயிற்சி

பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் வருவாய் துறை மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சி நேற்று நடைபெற்றது. இதை சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் தலைமை தாங்கி, தொடங்கிவைத்தார். தனியார் நிறுவனத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் மாணவ-மாணவிகள், வருவாய் துறையினருக்கு பயிற்சி அளித்தார்.

பயிற்சியில் புயல், மழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலங்களில் முதலுதவி சிகிச்சை அளிப்பது, மீட்பு பணி குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் தாசில்தார் மல்லிகா, வருவாய் ஆய்வாளர் முருகன், பேரிடர் மேலாண்மை ஒருங்கிணைப்பாளர் வெள்ளை நடராஜ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

முதலுதவி சிகிச்சை

கோவை மாவட்டத்தில் 10 லட்சம் பேருக்கு பேரிடர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளிக்க கலெக்டர் இலக்கு நிர்ணயம் செய்து உள்ளார். அதன்படி மாவட்ட நிர்வாகம் தனியார் ஆஸ்பத்திரி, தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சென்னைக்கு அடுத்தப்படியாக தமிழகத்தில் கோவையில் தான் விபத்துக்கள் அதிகமாக நடக்கிறது. விபத்தில் சிக்கி மயக்க அடைந்தவர்களுக்கு உடனே தண்ணீர் கொடுக்க கூடாது. அவர்களுக்கு முதலுதவி கொடுத்து மீட்க வேண்டும். ரத்த ஓட்டம் சீராக இருக்கிறதா? என்று பரிசோதனை செய்ய வேண்டும். நாடி துடிப்பை பரிசோதனை செய்ய வேண்டும். இருதயம் சீராக இயக்க தொடர்ந்து 30 முறை இதய பகுதியில் அழுத்த வேண்டும். இதன் மூலம் மூளைக்கு ரத்தம் செல்வதால் உயிரை காப்பாற்ற முடியும். இதுபோன்று பேரிடர் காலங்களில் பொதுமக்களை காப்பாற்றி முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்