அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு தங்க நாணயம் வழங்கல்

10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு தங்க நாணயம் வழங்கப்பட்டது.

Update: 2022-09-05 17:28 GMT

ஆசிரியர் தின விழா

பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளில் ஆசிரியர் தினம் நேற்று மாணவ-மாணவிகளால் கொண்டாடப்பட்டது. ஆனால் மாற்றாக ஒரு அரசு பள்ளியில் நடந்த ஆசிரியர் தின விழாவில் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிக்கு ஆசிரியர்களால் தங்க நாணயம் வழங்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிாியர் தின விழா நேற்று நடந்தது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சிதம்பரம் தலைமை தாங்கி கடந்த கல்வி ஆண்டில் 10 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பொதுத் தேர்வில் பள்ளியை 100 சதவீதம் தேர்ச்சி பெற செய்த ஆசிரியர்களுக்கு கலெக்டரின் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.

தங்க நாணயம் வழங்கல்

இதையடுத்து 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் கணித பாடத்தில் முதல் மதிப்பெண்ணும், பள்ளியிலேயே முதல் மதிப்பெண்ணும் பெற்ற மாணவி மீனாட்சிக்கு பள்ளியின் உயர்நிலை உதவி தலைமை ஆசிரியையும், கணித பட்டதாரி ஆசிரியையுமான பைரவி 1 கிராம் தங்க நாணயத்தை வழங்கினார். மேலும் அதே மாணவி ஆங்கில பாடத்தில் 98 மதிப்பெண் பெற்றமைக்காக ஆங்கில பட்டதாரி ஆசிரியர் சுரேஷ் 1 கிராம் தங்க நாணயத்தை வழங்கினார்.

இதேபோல் பள்ளியில் 10-ம் வகுப்பு தமிழ் வழியில் பயின்று முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் ஜெயராமனுக்கு அந்த வகுப்பின் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் செல்வராஜ் 1 கிராம் தங்க நாணயத்தை வழங்கினார். அப்போது தங்க நாணயம் பெற்ற மாணவ, மாணவியும், அவர்களின் பெற்றோரும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்தனர். ஆசிரியர் தின விழாவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிக்கு ஆசிரியர்கள் சார்பில் தங்க நாணயம் வழங்கப்பட்ட நிகழ்வு பெரம்பலூர் மாவட்டத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

Tags:    

மேலும் செய்திகள்