வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்யும் 6 சிறந்த விவசாயிகளுக்கு விருது

உள்ளூர் வேளாண் தொழில்நுட்பம், இயற்கை விவசாயம், வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த 6 சிறந்த விவசாயிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்.

Update: 2023-05-13 22:31 GMT

சாதனை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உழவர் நலன் காத்திட வேளாண்மைத்துறையினை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை என பெயர் மாற்றம் செய்து, வேளாண்மைக்கு என 3 தனி பட்ஜெட் சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய அனுமதி அளித்ததன் பலனாக பல உழவர் நலன் சார்ந்த திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டதால் மாநிலத்தின் உணவு தானிய உற்பத்தி கடந்த 2021-22 மற்றும் 2022-23-ம் ஆண்டுகளில் முறையே 119.97 லட்சம் மெட்ரிக் டன் மற்றும் 120.62 லட்சம் மெட்ரிக் டன் என்ற சாதனை அடையப்பட்டுள்ளது.

இது கடந்த 2014-15-ம் ஆண்டுக்கு பின்னர் அடையப்பட்டுள்ள சாதனை ஆகும்.

பணி நியமன ஆணை

தொடர்ந்து, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் 2021-ம் ஆண்டு வரை இயற்கை எய்திய பணியாளர்களின் 19 வாரிசுகளுக்கு சென்னை எழிலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன் 167 இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்குப் பணி நியமன ஆணை வழங்கியதன் காரணமாக, இறந்த பணியாளர் குடும்பத்தின் வறிய நிலையை போக்கி வாழ்வாதாரம் கிடைப்பதோடு, வேளாண்மைத்துறை பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு பரிசு

மேலும், இந்த நிகழ்வின்போது, புதிய உள்ளூர் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் புதிய எந்திரம் வடிவமைத்து பயன்படுத்தி வரும் 2 விவசாயிகளுக்கு தலா ரூ.1 லட்சமும், இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்து வரும் 3 விவசாயிகளுக்கு மொத்தமாக ரூ.2 லட்சமும், வேளாண் பொருட்களை சாகுபடி செய்து ஏற்றுமதி செய்து வரும் விவசாயிக்கு ரூ.2 லட்சமும் பரிசாக வழங்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக 6 சிறந்த விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை உற்பத்தி கமிஷனர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் சமயமூர்த்தி, வேளாண்மை இயக்குனர் அண்ணாதுரை, வேளாண் விற்பனை வேளாண் வணிகத்துறை இயக்குனர் நடராஜன், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் பிருந்தாதேவி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்