இரவு நேரங்களில் விவசாய பணிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்

பாம்புக்கடியால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க இரவு நேரங்களில் விவசாய பணிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வனத்துறை அதிகாரி அறிவுரை வழங்கினார்.

Update: 2023-08-19 11:41 GMT

பாம்புக்கடியால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க இரவு நேரங்களில் விவசாய பணிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வனத்துறை அதிகாரி அறிவுரை வழங்கினார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

வேலூர் மாவட்டத்தில் ஏராளமான மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில் மலைக்கிராமங்களை சேர்ந்த ஒரு குழந்தை உள்பட 2 பேர் பாம்புக்கடியால் உயிரிழந்தனர்.

பாம்புக்கடியால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் மலைக்கிராமங்களில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த மாவட்ட வன அலுவலர் கலாநிதி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி வேலூரை அடுத்த அமிர்தி வன உயிரின பூங்காவில் அமிர்தி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட உதவி வனபாதுகாவலர் மணிவண்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:-

இரவு நேரங்களில் விவசாயிகள் விவசாய பணி மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். வேறு வழியில்லை என்றால் விவசாய பணிக்கு செல்லும் போது மிக கவனமுடன் செல்ல வேண்டும். டார்ச் லைட் எடுத்துச் செல்ல வேண்டும். பாதுகாப்பு ஷூ அணிந்து செல்வது நல்லது.

பாம்புகள் உணவுகள் சாப்பிடும்போதும், முட்டை போட்டிருக்கும் போதும், இணையுடன் சேரும் போதும் தொந்தரவு செய்யாதீர்கள். இதனால் பாம்புகள் தற்காப்புக்காக தாக்குதலை மேற்கொள்ளும்.

பதற்றம் வேண்டாம்

வீட்டினை சுத்தமாக வைத்திருங்கள். குளிர்ச்சியான பகுதியை தேடி பாம்புகள் வரும். எனவே வீட்டின் அருகே தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஜன்னல், கதவினை மூடிக்கொண்டு தூங்க வேண்டும். குழந்தைகள் விளையாடும் போது கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். பாம்பு கடித்துவிட்டால் பதற்றம் அடையாமல் முதலுதவி எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

பாம்பு கடித்து விட்டால் மருத்துவரிடம் பாம்பினை காண்பிக்க அதை கொன்று எடுத்துச் செல்ல வேண்டாம். மாறாக செல்போனில் புகைப்படம் எடுத்து அதை மருத்துவரிடம் காண்பிக்கலாம். பாம்பினால் பல நன்மைகளும் உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து பொதுமக்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்