அவலாஞ்சியில் மைனஸ் 4 டிகிரி வெப்பநிலை பதிவு
ஊட்டியில் மக்களை உறைய வைக்கும் வகையில் உறைபனி தாக்கம் அதிகரித்து உள்ளது. அவலாஞ்சியில் மைனஸ் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. கடுங்குளிரிலும் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.
ஊட்டி,
ஊட்டியில் மக்களை உறைய வைக்கும் வகையில் உறைபனி தாக்கம் அதிகரித்து உள்ளது. அவலாஞ்சியில் மைனஸ் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. கடுங்குளிரிலும் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.
உறைபனி தாக்கம்
மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் டிசம்பா், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பனிக்காலம் நிலவும். குளு, குளு சீதோஷ்ண காலநிலை நிலவும் ஊட்டியில் கடந்த மாதம் இறுதியில் இருந்து உறைபனி தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் உறைபனி கொட்டி வருகிறது. இதனால் வழக்கத்தை விட கடும் குளிர் நிலவுகிறது.
இதற்கிடையே நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறைபனிக்கு வாய்ப்பு உள்ளது என்று அறிவித்து இருந்தது. இந்தநிலையில் நேற்று ஊட்டியில் உறைபனி தாக்கம் ஏற்பட்டது. ஊட்டி தாவரவியல் பூங்கா, ரெயில் நிலைய வளாகம், குதிரை பந்தய மைதானம், காந்தல் உள்ளிட்ட பகுதிகளில் பசுமையான புல்வெளிகள் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் காட்சி அளிக்கிறது.
குளிர் காய்கின்றனர்
கடந்த ஒரு வாரமாக ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் உறைபனி தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் சூடான தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். கடுங்குளிரை போக்க நெருப்பு மூட்டியும், ஹீட்டர் கருவி மூலமும் குளிர் காய்ந்து வருகின்றனர். அன்றாட பணிகளுக்கு செல்கிறவர்கள் கம்பளி ஆடைகள், தொப்பி அணிந்து செல்கிறார்கள்.
திறந்தவெளியில் நிறுத்தப்பட்டு உள்ள வாகனங்கள் மீது உறைபனி படர்ந்து காணப்படுகிறது. இதனை வாகன ஓட்டிகள் அகற்றிய பின்னரே வாகனங்களை இயக்க முடிகிறது. உறைபனியால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. ஊட்டியில் நேற்று குறைந்தபட்சமாக 1.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிைல பதிவானது.
மைனஸ் 4 டிகிரி
குறிப்பாக அவலாஞ்சி பகுதியில் மைனஸ் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. அங்கு மரங்களை ஒட்டியுள்ள புல்வெளிகள் மீது வெயில் பட்டவுடன், உறைபனி உருகி ஓடியது. அவலாஞ்சி அணையில் உறைபனி காரணமாக தண்ணீர் ஆவியாக மாறியது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளான அப்பர்பவானி போன்ற பகுதிகளிலும் உறைபனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதேபோல் குன்னூர், கோத்தகிரி பகுதிகளிலும் உறைபனி கொட்டி வருகிறது.
சுற்றுலா பயணிகள்
பொங்கல் பண்டிகையையொட்டி பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து கேரளா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. அவர்கள் புற்கள் மற்றும் வாகனங்கள் மீது படர்ந்து காணப்படும் உறைபனியை கண்டு ரசிக்கின்றனர்.
கொட்டி கிடக்கும் உறைபனியை கையில் எடுப்பதோடு, புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்கின்றனர். கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா மலைச்சிகரம், படகு இல்லம் போன்ற சுற்றுலா தலங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.