நான்கு வழிச்சாலை பகுதியில் வேகத் தடை
நான்கு வழிச்சாலை பகுதியில் வேகத் தடை;
சேவூர்
சேவூரில் முக்கிய பிரதான சாலையாக, அவினாசி - சத்தி, மைசூர் சாலை உள்ளது.இந்த சாலை வழியாக தினசரி காலை, மாலை, இரவு நேரங்களில் தனியார் பள்ளி பேருந்துகள், பனியன் நிறுவன பேருந்துகள், இரு சக்கர வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் என தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. குறிப்பாக தினசரி பனியன் கம்பெனி பேருந்துகள், பள்ளி பேருந்துகள், கல்லூரி பேருந்துகள் காலை நேரங்களில் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டி இருப்பதால் ஒன்றையொன்று முந்தி செல்கிறது. இந்நிலையில், சேவூர் கைகாட்டி ரவுண்டானாவில் இருந்து, 200 மீட்டர் தொலைவில், சேவூர் - சத்தி செல்லும் சாலையில் காமராஜ் நகர், அமலிநகர், சுமங்கலி நகர் மற்றும் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் இணைப்பு சாலை உள்ளது.இதில் அரசு மருத்துவமனைக்கு செல்ல தினசரி 20 முறை 108 ஆம்புலன்ஸ் வந்து செல்கின்றன. அதே போல் அப்பகுதியில் 1000 -க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 3000 -க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இவர்களில்
அதிகமானோர் மோட்டார் சைக்கிளை பயன்படுத்துகிறார்கள்.எதிரே, அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கோபி செல்லும் இணைப்பு சாலை என (சேவூர் கூட்டுறவு வங்கி பேருந்து நிறுத்தம் அருகே) நான்கு வழி சாலை உள்ளது. பள்ளி விடும் நேரமும் பள்ளி துவங்கும் நேரத்திலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் இந்த சாலை வழியாக வந்து செல்கின்றனர். இதனால் இந்த நான்கு வழிச்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்புகளும் நடந்துள்ளன. எனவே பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகளின் நலன் கருதி இந்த நான்கு வழிச்சாலை பகுதியில் வேகத் தடை அமைத்து விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும், பள்ளி குழந்தைகளும் கோரிக்கை எடுத்துள்ளனர்.
-------------