ஓடும் பஸ்சில் தானாக கழன்ற சக்கரம்.. டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு

டிரைவர் சரியான நேரத்தில் சாமர்த்தியமாக பஸ்சை நிறுத்தியதால் அதிலிருந்த பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.

Update: 2024-06-29 22:56 GMT

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் பனச்சமூட்டில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி நேற்று காலை 8 மணிக்கு மகளிருக்கு கட்டணம் இல்லாத ஒரு அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள் உள்பட ஏராளமானோர் பயணம் செய்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டு அருகிலும் பெண்கள் நின்று கொண்டிருந்தனர்.

அந்த பஸ் குழித்துறை தாலுகா அலுவலக சந்திப்பை கடந்து வந்த போது அதன் பின்பக்க சக்கரத்தில் இருந்து வித்தியாசமான சத்தம் கேட்டது. பின்னர் அந்த பஸ் குழித்துறை தபால் நிலைய சந்திப்பில் நின்றுவிட்டு மீண்டும் புறப்பட்ட போது அந்த பஸ் தடுமாறியபடி சென்றது. இதனை கவனித்த டிரைவர் சாலையோரம் பஸ்சை நிறுத்தி சக்கரங்களை ஆய்வு செய்தார். அப்போது பின்பக்க சக்கரத்தின் நட்டு மற்றும் போல்டுகள் உடைந்து சக்கரம் பாதி கழன்ற நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

டிரைவர் சரியான நேரத்தில் சாமர்த்தியமாக பஸ்சை நிறுத்தியதால் அதிலிருந்த பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். தொடர்ந்து பயணிகள் இறக்கப்பட்டு மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

மார்த்தாண்டம், குழித்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கும் அரசு பஸ்கள் பழுதடைந்து நடுவழியில் நிற்பது தொடர்கதையாக உள்ளது. இரவு நேரங்களில் சில பஸ்களில் முகப்பு விளக்குகள் எரிவதில்லை. இதனால் இந்த பஸ்களில் பயணிகள் அச்சத்துடனே பயணம் செய்கிறார்கள். எனவே பயணிகளின் நலன்கருதி தரமான பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்