போடியில் ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்து முதியவர் பலி
போடியில் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்து முதியவர் பலியானார்.;
போடி மின்வாரிய அலுவலக தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 70). இவர் நேற்று முந்தல் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து ஆட்டோவில் போடிக்கு வந்தார். அந்த ஆட்டோவை அதே பகுதியை சேர்ந்த ரஜினி (43) என்பவர் ஓட்டினார். போடி அரசு மருத்துவமனை அருகில் ஆட்டோ வந்தபோது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஆட்டோவில் வந்த முருகன் படுகாயம் அடைந்தார். ரஜினி லேசான காயமடைந்தார். இதையடுத்து 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் உயிரிழந்தார். இதுகுறித்து முருகனின் மகன் கருப்பையா, போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஆட்டோ டிரைவர் ரஜினி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.