ஆடி அமாவாசை: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்
திருச்சி, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் உள்ளூர் மட்டுமில்லாமல் வெளியூரிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
திருச்சி,
இந்துக்கள் தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் நீர் நிலைகளில் புனித நீராடி, மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கமானது. அந்த வகையில் 2-வது ஆடி அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் (திதி) கொடுப்பதற்காக நீர் நிலைகளில் திரண்டனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் உள்ளூர் மட்டுமில்லாமல் வெளியூரிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் தங்கள் வம்சம் செழிக்கவும், முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும் தர்ப்பணம் கொடுத்து ஆற்றில் பிண்டம் கரைத்து வழிபட்டனர்.
இதற்காக 500-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள், புரோகிதர்கள் காவிரிகரை மணல் பரப்பில் அமர்ந்து இருந்தனர். இதில் ஒரு சில இடங்களில் 10 முதல் 30-க்கும் மேற்பட்டோரை ஒரே இடத்தில் வரிசையாக அமர வைத்து அவர்களது மூதாதையர்களின் பெயர்களை கூறி வேத மந்திரங்களை ஓதினர்.
பின்னர் பச்சரிசி மாவு, எள், வாழைப்பழம், தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பிண்டமாக பிடித்து மந்திரங்கள் ஓதிய பின் அவற்றை ஆற்றில் கரைத்து தங்கள் முன்னோர்களை நினைத்தும், அவர்களின் ஆசி வேண்டியும் வழிபட்டனர். அதன் பின்னர் தர்ப்பணம் கொடுத்தவர்கள் அங்குள்ள விநாயகர் கோவில் முன்பு விளக்கேற்றினர். மேலும் பசு மாட்டிற்கு அகத்திக்கீரையை வழங்கினர்.
இதேபோல் திருச்சி அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை, தில்லைநாயகம் படித்துறை, முக்கொம்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆடி அமாவாசை தினத்தையொட்டி இன்று பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
தொடர்ந்து அவர்கள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர். புதுக்கோட்டை பல்லவன் குளத்தில் திரண்ட பக்தர்கள் சிவாச்சாரியார்கள் மூலம் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.