ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு செடல் குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பால்குடம் எடுத்தும், செடல் குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அந்த வகையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சுப்புராயலுநகரில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் 42-ம் ஆண்டு ஆடி திருவிழாவில் நேற்று சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக காலை 10 மணி அளவில் கெடிலம் ஆற்றில் இருந்து சக்தி கரகம் அலங்கரித்து வீதி உலா நடந்தது.
பின்னர் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டதும், சாகை வார்த்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரவில் சாமி வீதிஉலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நெய்வேலி
இதேபோல் நெய்வேலியில் 24-வது வட்டத்தில் உள்ள அன்னை முத்து மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, அன்னை முத்துமாரி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பின்னர் அன்னை முத்துமாரி அம்மனுக்கு தயிர், இள நீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அலங்காரத்திற்கு பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் சபா. ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பக்தர்களுக்கு அ ன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இரவில் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.
ஸ்ரீமுஷ்ணம்
ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கடந்த 2-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
விழாவில் நேற்று செடல் உற்சவம் நடந்தது. இதில் விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், செடல் அணிந்தும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து, தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மாலையில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.
இதேபோன்று மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பண்ருட்டி, சேத்தியாத்தோப்பு
பண்ருட்டி படைவீட்டு அம்மன் கோவில் திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சாமி வீதி உலா நடந்தது. விழாவில் நேற்று காலை கெடிலம் ஆற்றங்கரையில் சக்தி கரகம் எடுத்து ஊர்வலம் வருவதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மதியம் செடல் உற்சவம் நடந்தது. இதில் பக்தர்கள் செடல் அணிந்து வந்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
பின்னர், பிற்பகல் 2:30 மணிக்கு தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து , சிறப்பு அலங்காரத்தில் படைவீட்டம்மன் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இரவு 7 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்ததர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சேத்தியாதோப்பு அடுத்த வீரமுடியா நத்தம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா நடந்தது. இதில் பக்தர்கள் பறக்கும் காவடி எடுத்தும், செடல் குத்தி வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
குறிஞ்சிப்பாடி
குறிஞ்சிப்பாடி பஸ் நிலையம் அருகே உள்ள புத்து மாரியம்மன் கோவில் ஆடிதிருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சாமி வீதி உலா நடந்தது. விழாவில் 9-ம் நாளான நேற்று செடல் திருவிழா நடைபெற்றது. இதில் அம்மனை வேண்டி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் செடல் குத்தி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். மேலும் ஆடு, மாடு, கோழிகளுக்கும் பக்தர்கள் செடல் ஊசி செலுத்தி அம்மனை வழிபட்டனர்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் இன்று(சனிக்கிழமை) காலை 8 மணிக்கு திருத்தேர் விழா நடைபெறுகிறது.