பேராவூரணியில் ஒய்வு பெற்ற ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து திருட்டு முயற்சி - போலீசார் விசாரணை
பேராவூரணியில் ஒய்வு பெற்ற ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து திருட முயன்ற மர்மநபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.;
பேராவூரணி,
தஞ்சை மாவட்டம் நாட்டாணிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் வெங்கட்ராமன்(வயது70). இவரது மகள் பெங்களூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மகளை பார்ப்பதற்காக அடிக்கடி தந்தை வெங்கட்ராமன் பெங்களூர் சென்றுவிடுவார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டைப்பூட்டிவிட்டு பெங்களூர் சென்றிருந்தபோது இரண்டு முறை வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிலிருந்த நகை, வெள்ளி பாத்திரங்களை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து வெங்ட்ராமன் அளித்த புகாரின் பேரில் பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வெங்கட்ராமன் பாதுகாப்பு கருது தனது வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தினார். வீட்டில் விலை உயர்ந்த பொருட்களை வைக்காமல் பத்து நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு வெங்கட்ராமன் பெங்களூர் சென்று விட்டார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை பெங்களூரில் இருந்த வெங்கட்ராமன் மகள் சிசிடிவியை தனது மொபைல் போன் மூலம் பார்த்த போது இணைப்பு துண்டிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து பெங்களூரில் இருந்த அவர் நாட்டாணிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சிலருக்கு தகவல் தெரிவித்து அதன்பேரில் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் நேற்று காலை சென்று பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது தெரியவந்தது.
இது குறித்து பேராவூரணி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் திறந்து கிடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் வீட்டிலிருந்த சிசிடிவி பதிவு காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது, முகமூடி அணிந்த மர்ம நபர் பூட்டை உடைத்து உள்ளே சென்று, சுமார் 1 மணிநேரத்திற்கு மேல் பீரோ, அலமாரியில் பொருட்கள் இருக்கிறதா என தேடிப்பார்த்தது பதிவாகி இருந்தது.
இந்த சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.