ரெயில்வே பெண் ஊழியரை தாக்கி பாலியல் பலாத்கார முயற்சி

பாவூர்சத்திரத்தில் ரெயில்வே பெண் ஊழியரை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-02-17 18:45 GMT

பாவூர்சத்திரம்:

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள ரெயில்வே கேட்டில் ஊழியராக கேரளாவைச் சேர்ந்த 35 வயது பெண் பணியாற்றி வருகிறார். அவருக்கு திருமணம் ஆகி கணவர், குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு அந்த பெண் வழக்கம்போல் பணியில் இருந்தார். அப்போது நெல்லையில் இருந்து செங்கோட்டைக்கு சென்ற பாசஞ்சர் ரெயில் இரவு 8.45 மணியளவில் ரெயில்வே கேட்ைட கடந்து சென்றது.

பின்னர் நள்ளிரவில் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் செல்லும்போது, ரெயில்வே கேட்டை மூடி திறப்பதற்காக பெண் ஊழியர் அங்குள்ள அறையில் தனியாக இருந்தார். இதனை நோட்டமிட்ட மர்மநபர் நைசாக பெண் ஊழியரின் அறைக்குள் அத்துமீறி நுழைந்து, அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் ஊழியர் கூச்சலிட்டவாறு தப்பிக்க முயன்றார். அப்போது அந்த மர்மநபர் அங்கிருந்த தொலைபேசியை எடுத்து பெண் ஊழியரை தாக்கினார். இதில் காயமடைந்த பெண் ஊழியர் அறையில் இருந்து வெளியே ஓடி வந்து கூச்சலிட்டார்.

அப்போது அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, அந்த மர்மநபரை பிடிக்க முயன்றனர். ஆனாலும் அவர் இருளில் ஓடி தப்பி சென்று விட்டார். காயமடைந்த பெண் ஊழியருக்கு பாவூர்சத்திரம் தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக நெல்லை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தென்காசி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பெண் ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மர்மநபரை பிடிப்பதற்காக போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் சேகரித்து ஆய்வு செய்தனர். பாவூர்சத்திரம் நகரின் ைமயப்பகுதியில் தென்காசி- நெல்லை சாலையில் அமைந்துள்ள ரெயில்வே கேட்டில் பெண் ஊழியரை தாக்கி மர்மநபர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்