மகள்கள், மகனுடன் தீக்குளிக்க முயன்ற மூதாட்டி

நிலத்தை அபகரிக்க முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மூதாட்டி தனது 2 மகள்கள், மகனுடன் தீக்குளிக்க முயன்றார். இதனால் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2022-09-12 21:48 IST

நிலத்தை அபகரிக்க முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மூதாட்டி தனது 2 மகள்கள், மகனுடன் தீக்குளிக்க முயன்றார். இதனால் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தீக்குளிக்க முயற்சி

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கலெக்டர் அலுவலக போர்டிகோ அருகே ஒரு மூதாட்டி மற்றும் 2 பெண்கள் உள்பட 4 பேர் வந்தனர். அவர்கள் திடீரென பையில் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை எடுத்து தங்கள் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இதை பார்த்து அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் விரைந்து சென்று மண்எண்ணெய் பாட்டிலை பறித்து, 4 பேரும் தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

 தொடர் விசாரணை

அப்போது மூதாட்டி வேப்பிலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த குப்பம்மாள் (வயது62) என்பதும், இவர் தனது 2 மகள்கள் மற்றும் மகனுடன் தீக்குளிக்க முயன்றதும் தெரிய வந்தது. தங்களுக்கு சொந்தமான நிலங்களை சிலர் அபகரிக்க முயற்சி செய்து தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்து உள்ளோம். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை.

எனவே நிலத்தை அபகரிக்க முயற்சி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தீக்குளிக்க முயன்றதாக அவர் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மகள்கள், மகனுடன் மூதாட்டி தீக்குளிக்க முயன்ற சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்