டிரைவர் மீது தாக்குதல் மாநகர பஸ்களை நடுரோட்டில் நிறுத்தி போராட்டம் - போக்குவரத்து நெரிசல்

மாநகர பஸ் டிரைவர் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து பஸ்களை நடுரோட்டில் நிறுத்திவிட்டு டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-07-19 07:34 GMT

சென்னை தியாகராயநகரில் இருந்து மாநகர பஸ் ஒன்று நேற்று காலை திருவள்ளூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை பூந்தமல்லி காட்டுப்பாக்கத்தை சேர்ந்த துரை (வயது 38) என்பவர் ஓட்டி வந்தார். செங்கல்பட்டு மாவட்டம் பொன்விளைந்த களத்தூர் பகுதியை சேர்ந்த காத்தவராயன் (50) என்பவர் நடத்துனராக இருந்தார். பஸ்சில் திரளான பயணிகள் இருந்தனர்.

அந்த பஸ் திருவள்ளூரை அடுத்த அரண்வாயல் குப்பம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது நிறுத்தத்தில் டிரைவர் பஸ்சை நிறுத்தவில்லை என கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த அங்கிருந்த நபர்கள் பஸ்சை வழிமறித்து டிரைவர் துரையை தகாத வார்த்தையால் பேசி தாக்கி விட்டு தப்பி ஓடினர்

இதைத்தொடர்ந்து பஸ் டிரைவர் துரை வண்டியை அங்கேயே விட்டுவிட்டு நடத்துனருடன் கீழே இறங்கினார். இது பற்றி தகவல் அறிந்தவுடன் அந்த மார்க்கமாக வந்த 8-க்கும் மேற்பட்ட மாநகர பஸ் டிரைவர்கள் பஸ்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக பயணிகள் அவதியுற்றனர். மேலும் பஸ்கள் நடுரோட்டில் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இது பற்றிய தகவலறிந்த செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர் டில்லிபாபு, சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாநகர பஸ் டிரைவர்கள் மற்றும் நடத்துனர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்தனர். அதை தொடர்ந்து சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தை கைவிட்டு மாநகர பஸ் நடத்துனர்கள் மற்றும் டிரைவர்கள் மீண்டும் வண்டியை எடுத்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்