ஆயுதப்படை போலீஸ்காரர் மீது தாக்குதல்
திருச்செந்தூர் டாஸ்மாக் கடையில் ஆயுதப்படை போலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்திய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி மேலத் தெருவைச் சேர்ந்தவர் மிகாவேல் (வயது 28). இவர் தூத்துக்குடி ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். விடுப்பில் இருந்த இவர் நேற்று முன்தினம் இரவில் திருச்செந்தூர்- பரமன்குறிச்சி சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். அப்போது அங்கு மதுபாட்டில்கள் வாங்கிய மர்மநபர்களுக்கும், மிகாவேலுக்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த மர்மநபர்கள் மிகாவேலை கற்களால் தாக்கி, அவரது மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தினர். காயமடைந்த மிகாவேல் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.