முன்விரோதத்தில் 3 பேர் மீது தாக்குதல்
முன்விரோதத்தில் 3 பேர் மீது தாக்குதல் நடத்திய தந்தை-மகன்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள நடுச்சாலைப்புதூர் வடக்குத்தெருவை சேர்ந்தவர் தங்கத்துரை மகன் முத்துக்குமார் (வயது 28). விவசாயி. கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு முத்துக்குமாரின் சகோதரர் முத்துராஜூம், அதே ஊரைச் சேர்ந்த லட்சுமணன் மகன் பிரவினும் போட்டியிட்டனர். இதில் முத்துராஜ் வெற்றி பெற்றார். இதுதொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று முத்துக்குமார் தனது வீட்டு முன் நின்று கொண்டு அவரது உறவினர்கள் அனந்தகிருஷ்ணன், கணேசன் ஆகியோரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பிரவின், அவரது சகோதரர் ராபின்சன், தந்தை லட்சுமணன் ஆகியோருக்கும், முத்துக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த லட்சுமணன், அவரது மகன்கள் பிரவின், ராபின்சன் ஆகியோர் சோ்ந்து முத்துக்குமார், கணேசன், அனந்தகிருஷ்ணன் ஆகியோரை அவதூறாக பேசி கம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர். காயம் அடைந்த முத்துக்குமார் உள்பட 3 பேரும் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றிய புகாரின்பேரில் களக்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து லட்சுமணன் மற்றும் அவரது மகன்களை தேடி வருகிறார்.