பணம் எடுக்க உதவுவதுபோல் நடித்து ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து பெண்ணிடம் நூதன மோசடி

பணம் எடுக்க உதவுவதுபோல் நடித்து ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து பெண்ணிடம் நூதன முறையில் மோசடி செய்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-12-15 05:17 GMT

சென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனி 20-வது தெருவைச் சேர்ந்தவர் அங்கம்மாள் (வயது 45). இவர், நேற்று அம்பத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்யும் தனது மகன் கார்த்திகேயனின் ஏ.டி.எம். கார்டை எடுத்துக்கொண்டு பணம் எடுக்க ஏ.டி.எம். மையத்துக்கு சென்றார்.

எம்.கே.பி. நகர் 1-வது தெருவில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் உள்ள எந்திரத்தில் ஏ.டி.எம். கார்டை சொருகி பணம் எடுக்க முயன்றார். ஆனால் பணம் வராததால் அருகில் நின்றிருந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவரிடம் உதவி கேட்டார்.

அவரும் அங்கம்மாளிடம் இருந்து ஏ.டி.எம். கார்டை வாங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் செருகி பார்த்துவிட்டு, பணம் வரவில்லை என கூறி ஏ.டி.எம். கார்டை திருப்பிக்கொடுத்தார். வீட்டுக்கு சென்ற அங்கம்மாள், தனது மகனிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து, பணம் வரவில்லை என்று கூறினார்.

இதற்கிடையில் கார்த்திகேயனின் செல்போனுக்கு அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.12 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தனது தாயார் கொடுத்த ஏ.டி.எம். கார்டை பார்த்தபோது, அனது தனது கார்டு இல்லை என்பது தெரிந்து மேலும் அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர்தான் ஏ.டி.எம். மையத்தில் அங்கம்மாளுக்கு பணம் எடுக்க உதவி செய்வதுபோல் நடித்த மர்மநபர், அவரிடம் ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்துவிட்டு, பின்னர் அந்த கார்டை பயன்படுத்தி கார்த்திகேயன் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்தது தெரியவந்தது.

இந்த நூதன மோசடி தொடர்பாக எம்.கே.பி. நகர் போலீசில் கார்த்திகேயன் புகார் செய்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வர்கீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்