ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா கொடியேற்றம்

திசையன்விளை அருகே ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2023-10-12 20:04 GMT

திசையன்விளை:

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசலில் ஹசரத் சையதலி பாத்திமா (ரலி), ஹசரத் சேகு முகமது (ஒலி) தர்கா உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கந்தூரி விழா வெகு சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலையில் பள்ளிவாசல் இமாம் முகமது யூசுப் அலிம் தலைமையில் கத்முல் குர்ஆன் ஓதுதல், குர்ஆன் தமாம் செய்தல் நடந்தது.

பின்னர் அரண்மனை புலிமான் குளத்தில் இருந்து பரம்பரை டிரஸ்டி எச்.ஹபிபுர் ரகுமான் பிஜிலி, என்.அசிம் அகமது பிஜிலி ஆகியோர் சாரட் குதிரைவண்டி மீது அமர்ந்தபடி கொடி மற்றும் சந்தனகுடத்தை பேண்டுவாத்தியம் முழங்க தர்காவிற்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர். ஊர்வலம் செல்லும் வழியில் ராமன்குடியில், முத்துகிருஷ்ணாபுரம் அருள்துரை நாடார் வீட்டில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு காணிக்கை, அன்னதானம் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. இதில் இஸ்லாமியர்கள் மட்டும் இல்லாமல் மற்ற மதத்தினரும் திரளாக கலந்து கொண்டனர். இது மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இருந்தது.

பின்னர் ஊர்வலமானது ஆத்தங்கரை பள்ளிவாசலை அடைந்ததும் வரவேற்பு அளிக்கப்பட்டது. சாரட் வண்டியில் இருந்தபடி பள்ளிவாசல் முன்பு பரம்பரை டிரஸ்டி எச்.ஹபிபுர் ரகுமான் பிஜிலி கொடியேற்றினார். அப்போது அங்கு கூடி இருந்தவர்கள் 'நாரே தக்குபீர் அல்லாகு அக்பர்' என கோஷம் எழுப்பினர். தொடர்ந்து தர்காவில் சந்தனம் மெழுகுதல், மாலையில் மவ்லூது ஷரிப் ஓதுதல், ராத்திப்புத்தல், இரவு இஸ்லாமிய சமய சொற்பொழிவு, இஸ்லாமிய கச்சேரி நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டும் இன்றி கேரள மாநிலத்தில் இருந்தும் திரளான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை சிறப்பு துவா ஓதப்பட்டு நேர்ச்சை வினியோகம் செய்யப்படுகிறது. ஏற்பாடுகளை பரம்பரை டிரஸ்டிகள் நயாஸ் அகமது பிஜிலி, ஹபிபுர் ரகுமான் பிஜிலி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்