ஏ.டி.சி. வாகன நிறுத்துமிடம் சீரமைப்பு

ஊட்டி ஏ.டி.சி. வாகன நிறுத்துமிடம் சேறும், சகதியுமாக இருந்தது. இதுகுறித்து தினத்தந்தி செய்தி எதிரொலியாக வாகன நிறுத்துமிடம் சீரமைக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.;

Update:2023-01-19 00:15 IST

ஊட்டி,

ஊட்டி ஏ.டி.சி. வாகன நிறுத்துமிடம் சேறும், சகதியுமாக இருந்தது. இதுகுறித்து தினத்தந்தி செய்தி எதிரொலியாக வாகன நிறுத்துமிடம் சீரமைக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

வாகன நிறுத்துமிடம்

சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக நீலகிரி மாவட்டம் ஊட்டி திகழ்கிறது. இங்கு நிலவும் காலநிலையை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதுதவிர வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து, இயற்கை அழகை கண்டு ரசிக்கின்றனர்.

குறிப்பாக சமவெளி பகுதிகளில் இருந்து ஊட்டிக்கு வாகனங்களில் வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஊட்டி நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வந்தது. இதை தவிர்க்க ஊட்டி நகராட்சி சார்பில், ஏ.டி.சி. வாகன நிறுத்துமிடத்தில் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

சேறும், சகதியுமாக மாறியது

அதன்படி காருக்கு ரூ.50, பஸ் மற்றும் வேனுக்கு ரூ.100, இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி வந்தனர். இதற்கிடையில் கடந்த ஆண்டு பெய்த தொடர் மழை காரணமாக வாகன நிறுத்துமிடம் சேறும், சகதியுமாக மாறியது. அங்கு வாகனங்கள் சென்று வந்ததால், அந்த இடம் மேலும் மோசமான நிலைக்கு சென்று விட்டது.

மேலும் பள்ளம், மேடாக மாறிவிட்டது. இதனால் அங்கு வாகனங்களை நிறுத்த முடியாமல் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். தற்போது நோ பார்க்கிங் பகுதியில் வாகனம் நிறுத்தினால், கூடுதலாக அபராதம் விதிக்கப்படுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

சீரமைப்பு

இதனால் சேறும், சகதிமாக உள்ள வாகன நிறுத்துமிடத்தை சீரமைக்க வேண்டும் என்றும், அந்த இடத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்றும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தினத்தந்தியில் பொதுமக்கள் கருத்துடன் விரிவாக செய்தி வெளியானது.

இதையடுத்து ஊட்டி ஏ.டி.சி. வாகன நிறுத்துமிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அங்கு பள்ளமான இடங்களில் மணல் கொட்டி சமன்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் அங்கு கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டு சுத்தமாக காட்சி அளிக்கிறது. பொதுமக்கள், சுற்றுலா பயணிகளின் நலன் கருதி செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த நகராட்சி அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்து உள்ளனர். மேலும் அந்த இடத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்