தூத்துக்குடி கழிவுநீர் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தனியார் ஆலைகளுக்கு விநியோகம்

தூத்துக்குடி கழிவுநீர் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தனியார் ஆலைகளுக்கு விநியோகத்தை கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கிவைத்தார்.

Update: 2023-08-29 18:45 GMT

தூத்துக்குடி மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை தொழிற்சாலைகளுக்கு வினியோகம் செய்யும் பணியை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று தொடங்கி வைத்தார்.

சுத்திகரிப்பு நிலையம்

தூத்துக்குடி மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தின் மூலம் வரும் கழிவுநீரை சுத்திகரித்து பயன்படுத்துவதற்காக தருவைகுளம் உரக்கிடங்கு பகுதியில் 28 எம்.எல்.டி. திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையில் தற்போது இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் தினமும் சுமார் 7 எம்.எல்.டி கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது. இந்த தண்ணீரை கொண்டு தருவைகுளம் பகுதியில் மாநகராட்சி சார்பில் ஏராளமான மரங்கள் மற்றும் செடிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த மரங்கள் மற்றும் செடிகளுக்கு 2 எம்.எல்.டி தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள 5 எம்.எல்.டி சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை தனியார் தொழிற்சாலைகளுக்கு வழங்க மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது.

வினியோகம் தொடக்கம்

அதன்படி டேங்கர் லாரிகள் மூலம் தனியார் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வினியோகத்தை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று தொடங்கி வைத்தார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையாளர் தினேஷ்குமார், செயற்பொறியாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்கட்டமாக தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்துக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. ஸ்பிக் நிறுவனத்தினர் தண்ணீருக்கான கட்டணத்தை செலுத்திவிட்டு டேங்கர் லாரி மூலம் தண்ணீரை எடுத்து செல்கின்றனர். இதே போன்று தண்ணீர் தேவைப்படும் தொழிற்சாலைகள் தண்ணீரை எடுத்து செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆய்வு

மேலும், தூத்துக்குடியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறுவதற்காக 2 கட்டமாக பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த விண்ணப்பங்கள் தற்போது பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப படிவங்களில் தெரிவித்துள்ள தகவல்களை சரிபார்க்கும் விதமாக கலெக்டர் நேற்று தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட காந்தி நகர், ஜார்ஜ் ரோடு, மேல சண்முகபுரம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாநகராட்சி ஆணையர், தூத்துக்குடி தாசில்தார் பிரபாகரன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்