வாகன காப்பகத்தில் கியாஸ் சிலிண்டர் வாகனங்களை நிறுத்துவதால் விபத்து அபாயம்: சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
கம்பத்தில் வாகன காப்பகத்தில் கியாஸ் சிலிண்டர் வாகனங்களை நிறுத்துவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.
கம்பம் பகுதியில் 33 வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு கியாஸ் விற்பனையாளர்கள் பாதுகாப்பு வசதியுடன் குடோன் அமைத்து கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்து வருகின்றனர். மேலும் ஓட்டல், டீக்கடை உள்ளிட்ட வர்த்தக பயன்பாட்டிற்கு தனியாக கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. வர்த்தக நிறுவனத்திற்கு வழங்கப்படும் கியாஸ் சிலிண்டர்களை வைப்பதற்கு குடோன் அமைக்கப்படவில்லை.
இதனால் தேனியில் இருந்து லாரிகளில் மொத்தமாக கியாஸ் சிலிண்டர்கள் கொண்டு வரப்பட்டு கம்பத்தில் உள்ள வாகன காப்பகத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து கியாஸ் சிலிண்டர் வர்த்தக நிறுவனங்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. வாகன நிறுத்தத்தில் கியாஸ் சிலிண்டரை பாதுகாப்பு வசதி இல்லாமல் வைத்திருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து தீயணைப்புத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும். மேலும் கார் நிறுத்தும் பகுதியில் கியாஸ் சிலிண்டருடன் நிறுத்தி வைக்கப்படும் கியாஸ் நிறுவன வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.