பெண் சார் பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
ஆலங்குளம் அருகே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பெண் சார் பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பெண் சார் பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
பெண் சார் பதிவாளர்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அரிநாராயணன் (வயது 54). வக்கீலான இவர் பாப்பாக்குடி வட்டார காங்கிரஸ் தலைவராகவும், ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலராகவும் உள்ளார்.
இவரது மனைவி ஆனந்தி (47). இவர் ஊத்துமலையில் சார் பதிவாளராக பணியாற்றி வந்தார். பத்திரப்பதிவு செய்ததில் முைறகேடு தொடர்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆனந்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து அவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
லஞ்ச ஒழிப்பு சோதனை
நேற்று காலையில் மருதம்புத்தூர் கிராமத்தில் உள்ள ஆனந்தியின் வீட்டிற்கு தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீரென்று வந்தனர். அவர்கள் வீட்டில் சோதனை செய்தனர். வீட்டின் கதவு பூட்டப்பட்டு வெளியாட்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
மேலும் ஆனந்திக்கு சொந்தமான பள்ளிக்கூடத்திலும் 10 போலீசார் கொண்ட குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.
முக்கிய ஆவணங்கள் சிக்கியது
நேற்று மாலை வரை நடைபெற்ற இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
ஆலங்குளம் அருகே சார் பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்தி சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.