சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தில்வீட்டுமனை பட்டா கேட்டுபொதுமக்கள் தர்ணா போராட்டம்26 பெண்கள் உள்பட 34 பேர் கைது
சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடத்தி 26 பெண்கள் உள்பட 34 பேர் கைது செய்யப்பட்டனா்.;
சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 26 பெண்கள் உள்பட 34 பேரை போலீசார் கைது செய்தனர்.
தர்ணா போராட்டம்
பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்டது அம்மாபாளையம், தொப்பம்பாளையம், கோடம்பாளையம். இந்த பகுதிகளில் வசிக்கும் ஆண்களும், பெண்களும் என சுமார் 100 பேர் பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த மாவட்ட பொதுச்செயலாளர் சரவணகுமார், மாவட்ட சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் சக்திவேல், சத்தியமங்கலம் நகர தலைவர் செல்வராஜ் ஆகியோருடன் நேற்று மதியம் 12 மணி அளவில் சத்தியமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு ஒன்று திரண்டனர்.
பின்னர் அங்கு உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் வருவாய்த்துறை முதல் நிலை வருவாய் ஆய்வாளர் நாச்சிமுத்து, சத்தியமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் சபரி வாசன், நில வருவாய் ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
வீட்டுமனை பட்டா
அப்போது பொதுமக்கள் கூறும்போது, 'நாங்கள் பல ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா இல்லாமல் உள்ளோம். பலமுறை கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படவில்லை. எனவே இன்று (அதாவது நேற்று) இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்' என்றனர்.
அதற்கு வருவாய்த்துறை அலுவலர்கள் கூறும்போது, 'உங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும்' என்றனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
34 பேர் கைது
இந்த நிலையில் சத்தியமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் சபரீசன் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் அவர், 'சத்தியமங்கலம் தாலுகா அலுவலகம் வாசல் முன்பு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளே வெளியே செல்ல முடியாதபடி அளவுக்கு அடைத்தபடி போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தனர்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, போராட்டத்தில் ஈடுபட்டதாக 26 பெண்கள் உள்பட 34 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அனைவரும் சத்தியமங்கலம் தனியார் நிறுவன மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டார்கள். அதன் பின்னர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.