கும்பகோணத்தில், கோர்ட்டு பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் ஊர்வலம்
இந்திய தண்டனை சட்ட திருத்த மசோதாக்களை திரும்ப பெறக்கோரி கும்பகோணத்தில் கோா்ட்டு பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் ஊர்வலமாக சென்றனர்.
இந்திய தண்டனை சட்ட திருத்த மசோதாக்களை திரும்ப பெறக்கோரி கும்பகோணத்தில் கோா்ட்டு பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் ஊர்வலமாக சென்றனர்.
சட்ட திருத்த மசோதா
இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் விசாரணை முறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்ட திருத்த மசோதாக்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என கும்பகோணம் வக்கீல்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த நேற்று முன்தினம் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டு, ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2-வது நாளான நேற்று வக்கீல்கள் கோர்ட்டுகளை புறக்கணித்து விட்டு கும்பகோணம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய சாலைகள் வழியாக கும்பகோணம் தலைமை தபால் நிலையத்திற்கு வந்தடைந்தனர். இந்த ஊர்வலத்திற்கு வக்கீல்கள் சங்க தலைவர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தார். ஊர்வலத்தை மூத்த வக்கீல் சுகுமாறன் தொடங்கிவைத்தார்.
வேறு தேதிக்கு ஒத்திவைப்பு
இந்த ஊர்வலத்தில் மூத்தவக்கீல்கள் சக்கரபாணி, வைத்தியநாதன், முன்னாள் சங்க தலைவர் ராஜசேகர், துணைத்தலைவர் ரவிச்சந்திரன், பொருளாளர் ராஜசீனிவாசன், சசிகலா, பானுமதி, அனுராதா உள்பட திரளான வக்கீல்கள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்தும், இந்தி திணிப்பை கண்டித்தும், சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து 2 நாட்கள் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டன. இந்த 2 நாட்களில் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த வழக்குகள் எல்லாம் வேறொரு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.