கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில்மகளிர் உரிமைத்தொகை பெறமேல்முறையீடுக்கு குவிந்த பெண்கள்
கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் மகளிர் உரிமைத்தொகை பெற மேல்முறையீடுக்கு குவிந்த பெண்களால் பரப்பு நிலவியது.;
கோவில்பட்டி (கிழக்கு):
கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத பெண்கள் மேல்முறையீடு மனு கொடுப்பதற்காக குவிந்தனர். போதிய ஏற்பாடு செய்யாத அதிகாரிகளுடன் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேல்முறையீடு முகாம்
கோவில்பட்டியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத பெண்கள் மேல்முறையீடு மனு கொடுப்பதற்காக சிறப்பு முகாம் நடந்து வருகிறது. நேற்று காலையில் இந்த முகாமில் மேல்முறையீடு மனு கொடுப்பதற்காக ஏராளமான பெண்கள் தாலுகா அலுவலகத்தில் குவிந்தனர்.
நேரம் செல்ல செல்ல பெண்கள் அதிக அளவில் வந்ததால், விண்ணப்பத்தின் நிலைகுறித்தும், மேல்முறையீடு குறித்தும் விளக்கம் அளிக்க டோக்கன் வழங்கப்பட்டது. இந்த டோக்கனை வாங்குவதற்கு பெண்கள் முண்டியடித்து கொண்டு சென்றதால் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி வயதான பெண்கள் சிலர் மயங்கினர். அவர்களை ஓரமாக அழைத்து சென்று அமர வைத்தனர்.
கூச்சல், குழப்பம்
அந்த பகுதியில் கூச்சல் குழப்பமுமாக காணப்பட்டது. மேலும், டோக்கல் வழங்குவதற்கு குறுகலான அறையில் பெண்களை அமர வைத்தனர். அங்கும் போதிய இடவசதி இல்லாமல் அவர்கள் தவித்தனர். அந்த அறைக்குள் ெநரிசல் ஏற்பட்டதால், அதிகாரிகளுடன் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அப்பகுதியில் கூச்சல் நீடித்த நிலையில், தாசில்தார் லெனின் மற்றும் போலீசார் பெண்களை சமாதானப்படுத்தினர். அப்போது தாசில்தார் கூறுகையில், வருகிற 30-ந்தேதி வரை முகாம் நடைபெறும். அதுவரை பொறுமையாக வந்து மேல்முறையீடு செய்யலாம். அனைவரது மேல்முறையீடுகளும் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
தொடர்ந்து டோக்கன் அடிப்படையில் பெண்கள் அழைக்கப்பட்டு மேல்முறையீடு செய்வதற்கு ஏற்பாடு ெசய்யப்பட்டது.