ஈரோட்டில்சாலையோரத்தில் கொட்டப்பட்ட தக்காளிவிலை வீழ்ச்சி காரணமா?

ஈரோட்டில் விலை வீழ்ச்சி காரணமாக சாலையோரத்தில் தக்காளி கொட்டப்பட்டது.

Update: 2023-04-21 21:54 GMT

ஈரோட்டில் விலை வீழ்ச்சி காரணமாக சாலையோரத்தில் தக்காளி கொட்டப்பட்டது.

விலை வீழ்ச்சி

ஈரோடு சூளை எம்.ஜி.ஆர். நகரில் இருந்து எல்.வி.ஆர். காலனி செல்லும் ரோடு உள்ளது. இந்த ரோட்டின் ஓரத்தில் நேற்று காலை தக்காளி பழங்கள் கொட்டி குவிக்கப்பட்டு இருந்தது. பொதுவாக அழுகிய தக்காளிகள் ஆங்காங்கே கொட்டப்படுவது வழக்கம். ஆனால், நல்ல நிலையில் இருந்த தக்காளி சாலையோரத்தில் கொட்டப்பட்டு குவிக்கப்பட்டு இருந்தது அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இதுபற்றி அந்த பகுதியை ஒருவர் கூறும்போது, 'சமீப காலமாக தக்காளி வரத்து அதிகரித்து, விலை வீழ்ச்சியடைந்து வருகிறது. ஒரு கிலோ ரூ.10 வரை விற்கப்படுகிறது. ஆனால், வியாபாரிகள் கொண்டு வரும் தக்காளி முழுமையாக விற்பது இல்லை. ஒரு நாள் வைத்திருந்தாலும் தக்காளி அழுகி விடும் என்பதால், சந்தைகளில் வியாபாரம் முடிந்து செல்லும் வியாபாரிகள் தக்காளியை கொட்டினார்கள்' என்றார்.

கோரிக்கை

திடீரென்று தக்காளி விலை உயர்ந்து தேசிய அளவில் பெரும் பிரச்சினையாக பேசப்படுவதும், திடீரென்று தக்காளி விலை குறைந்து விவசாய தோட்டங்களிலேயே அவை வீணாக கொட்டப்படுவதும் மாறி மாறி நடக்கும் காட்சியாக உள்ளது. இது விவசாயிகளையும், பொதுமக்களையும் மிகவும் பாதிக்கிறது. எனவே விவசாய விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச விலையை அரசு நிர்ணயம் செய்வதுடன், விவசாய விளை பொருட்களை அரசே வாங்கி விற்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்