கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் ஜூன் மாதம் 30-ந் தேதி வரை வழங்கப்பட வேண்டிய 3 சதவீத அகவிலைப்படியை நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கான சந்தா தொகை ரூ.497 ஆக உயர்த்தப்பட்டதை கைவிட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் எஸ்.சங்கரன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஹரிதாஸ், சுப்பிரமணியம், மணிபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன் உள்பட ஓய்வூதியர்கள் பலர் கலந்துகொண்டனர்.