ஈரோட்டில்சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழைபல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன

ஈரோட்டில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

Update: 2023-08-09 20:31 GMT

ஈரோட்டில் சூறைக்காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையின்போது பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து கீழே விழுந்தன.

ஆலங்கட்டி மழை

தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை காலம் தொடங்கி ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் ஈரோடு மாவட்டத்தில் போதுமான மழை பெய்யவில்லை. இதற்கிடையில் கடந்த ஒரு வாரமாக வெயில் 100 டிகிரிக்கு மேல் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் மழை வராதா என ஏக்கத்துடன் பார்த்தனர்.

இந்த நிலையில் நேற்று பகலிலும் வழக்கம்போல் வெயில் அடித்தது. அதைத்தொடர்ந்து மாலையில் வானில் கருமேகங்கள் திரண்டன. பின்னர் 5.40 மணிக்கு பலத்த சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இந்த மழை சுமார் ½ மணி நேரம் பெய்தது.

மின்சாரம் தடை

இதனால் ஈரோடு மாநகர் பகுதியில் கொங்காலம்மன் கோவில் வீதி, ஆர்.கே.வி.ரோடு, முனிசிபல் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் சூறாவளி காற்று காரணமாக ஈரோடு -சத்தி ரோடு, பெரியண்ணன் வீதி, பெரியார் நகர், எஸ்.கே.சி. ரோடு, ராஜாஜிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெரிய மரங்கள் முறிந்து கீழே விழுந்தன.

ஒரு சில இடங்களில் மரக்கிளைகள் மின் கம்பிகள் மீது விழுந்ததால் மின்சாரம் தடைபட்டது. இதனால் இரவு நேரத்தில் பொதுமக்கள் மின்சாரம் இன்றி பெரிதும் சிரமப்பட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

காந்திஜி ரோடு பகுதியில் ரோட்டோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தள்ளுவண்டியில் மரம் விழுந்து சேதமானது. கருங்கல்பாளையம் ராமமூர்த்தி நகரில் மரக்கிளை முறிந்து வீட்டின் மேற்கூரையில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்ததால் பொதுமக்கள் இதுபற்றி ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கும், மின் வாரியத்துக்கும் தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் மின் வாரிய ஊழியர்கள் விரைந்து சென்று, மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மரக்கிளைகள் ரோட்டில் விழுந்ததால் ஒருசில இடங்களில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்