ஈரோட்டில் கம்ப்யூட்டர் உதிரிபாக விற்பனையாளர் பல லட்சம் ரூபாய் பெற்று மோசடி பாதிக்கப்பட்டவர்கள் கடையை முற்றுகையிட்டதால் பரபரப்பு

முற்றுகை

Update: 2022-07-22 17:18 GMT

நாமக்கல் பகுதியை சேர்ந்த ஒருவர் ஈரோடு பஸ் நிலையம் அருகில் கடை வைத்து, கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் மற்றும் மடிக்கணினி போன்றவற்றை விற்பனை செய்து வருகிறார். இவரிடம் ஒருவர் புதிதாக மடிக்கணினி வாங்க, ஆன்லைன் முறையில் ரூ.56 ஆயிரத்து 500 அனுப்பியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்டு கம்ப்யூட்டர் உதிரிபாக விற்பனையாளர் மடிக்கணினி வழங்காமல் அலைக்கழித்துள்ளார். இதேபோல், சென்னையை சேர்ந்த வாலிபரிடமும் விலை உயர்ந்த சாப்ட்வேர் மற்றும் மடிக்கணினி உதிரி பாகங்கள் தருவதாக ரூ.1 லட்சம் பணம் பெற்று, ஏமாற்றி வந்துள்ளார். இதேபோல் பலரிடம் கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள் தருவதாகவும், சிலரிடம் கடனாகவும் பல லட்சம் ரூபாய் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கம்ப்யூட்டர் உதிரிபாக விற்பனையாளர் அவரது கடையில் இருந்தபோது, பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்த 20-க்கும் மேற்பட்டோர், அவரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, முற்றுகையிட்டவர்களிடமும், அந்த நபரிடமும் விசாரணை நடத்தினர். இதில் அவர் பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து, அவரை போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்