ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தது.

Update: 2022-08-27 21:57 GMT

ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தது.

காதல் ஜோடி

ஈரோடு சூரம்பட்டி காமராஜ் முதல் வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவருடைய மகன் லட்சுமி நாராயணன் (வயது 25). பட்டப்படிப்பு முடித்து உள்ள இவர் ஈரோட்டில் உள்ள ஒரு ஆடிட்டர் அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சிறுகளஞ்சி பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவருடைய மகள் ஷாலினி (25). லட்சுமி நாராயணனும், ஷாலினியும் ஒரே கல்லூரியில் படித்ததால் அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 7 ஆண்டுகளாக அவர்கள் காதலித்து வந்தனர்.

பாதுகாப்பு கேட்டு....

இந்த நிலையில் அவர்களுடைய காதல் விவரம் ஷாலினியின் பெற்றோருக்கு தெரியவந்தது. 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், ஷாலினிக்கு வேறு ஒருவரை திருமணம் செய்து வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனால் காதல் ஜோடி வீடுகளில் இருந்து வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தனர். இதைத்தொடர்ந்து லட்சுமி நாராயணனும், ஷாலினியும் வீடுகளில் இருந்து வெளியேறி கடந்த 24-ந் தேதி திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார்கள். இந்தநிலையில் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி நேற்று பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தது. இதையடுத்து இருதரப்பு பெற்றோரையும் போலீசார் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன்பிறகு காதல் கணவருடன் ஷாலினியை போலீசார் அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்