கிளியனூர் சோதனைச் சாவடியில்போலீசாரிடம் 'இ-செலான்' கருவியை பறித்த 2 பேர் கைது
கிளியனூர் சோதனைச் சாவடியில் போலீசாரிடம் ‘இ-செலான்’ கருவியை பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனா்.;
வானூர்,
திண்டிவனம்-புதுச்சேரி இடையே கிளியனூர் மெயின் ரோட்டில் மதுவிலக்கு சோதனைச் சாவடி செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று இங்கு கிளியனூர் போலீஸ்காரர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து கொண்டு வேகமாக 2 பேர் வந்தனர்.
இதைக்கண்ட போலீசார் அவர்களை நிறுத்தி வேகமாக செல்வது ஏன்? என்று கேட்டு அபராத கட்டணம் வசூலிக்க முயன்றனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென போலீஸ்காரர் திருஞானம் கையில் இருந்த 'இ-செலான்' கருவியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். மேலும் புகாரின் பேரில் கிளியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதில் இ-செலான் கருவியை பறித்துச் சென்றவர்களின் அடையாளம் தெரியவந்தது. இதையடுத்து திருவண்ணாமலை மாவட்டம் தோப்பு தெருவை சேர்ந்த ரங்கநாதன் மகன் சந்தோஷ் (வயது 20), கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (22) ஆகியோரை கைது செய்தனர். சந்தோஷ் மருந்துக் கடையிலும், சதீஷ், உணவகம் ஒன்றிலும் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் தெரிவித்த தகவலின் பேரில் கிளியனூர் அருகே உள்ள ஒரு மேம்பாலத்தின் அடியில் பதுக்கி வைத்திருந்த இ-செலான் கருவியை போலீசார் கைப்பற்றினர்.