2 காதல் ஜோடிகள் போலீசில் தஞ்சம்
தர்மபுரியில் 2 காதல் ஜோடிகள் போலீசில் தஞ்சம் அடைந்தனர்.
தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 27). இவர் சூளகிரி பகுதியில் செயல்படும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு பணிபுரிந்த ஜானகி (23) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. 2 பேரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதுபற்றி அறிந்த பெற்றோர் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய 2 பேரும் தர்மபுரி அருகே கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கோரி தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். இது குறித்து தர்மபுரி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கம்பைநல்லூர் பொம்மிட்டி கிராமத்தை சேர்ந்தவர் காயத்ரி (19). இவர் தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்சி. வேதியியல் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கல்லூரி மாணவி காயத்ரி தனது உறவினர் வீடான தர்மபுரி அருகே ஒட்டப்பட்டி என்.ஜி.ஜி.ஓ காலனியில் உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றார். அப்போது அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சத்தியபிரியன் (25) என்பவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டு, 2 ஆண்டுகள் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காயத்ரியும், சத்தியபிரியனும், தர்மபுரி அருகே மேட்டுக்கொட்டாய் கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அவர்கள் இருவரும் பாதுகாப்பு கேட்டு அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். காதல் ஜோடி இருவேறு சமூகம் என்பதால், இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேசி சமரசம் செய்து போலீசார் காதல் ஜோடியை அனுப்பி வைத்தனர்.