கடனுக்கு டீசல்போட வலியுறுத்தி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

குடியாத்தத்தில் கடனுக்கு டீசல் போட வலியுறுத்தி பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். அவருடைய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-10-15 17:30 GMT

தாக்குதல்

குடியாத்தத்தை அடுத்த மேல்பட்டிரோடு கார்த்திகேயபுரம் பகுதியில் தனியார் பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு கடந்த 13-ந் தேதி இரவு செட்டிக்குப்பம் கிராமம் புதுமனை கிருஷ்ணசாமி நகர் பகுதியை சேர்ந்த பாபு என்பவரின் மகன் பாஸ்கர் (வயது 30) என்பவர் காரில் வந்துள்ளார்.

அப்போது அங்கு பணியில் இருந்த மூங்கப்பட்டு கிராமத்தை சேர்ந்த சரவணன் (45) என்பவரிடம் காருக்கு கடனாக டீசல் நிரப்புமாறு கூறியிருக்கிறார். அதற்கு பெட்ரோல் பங்க் ஊழியர் சரவணன் கடனாக டீசல் போட முடியாது என தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கர் பெட்ரோல் பங்க் ஊழியர் சரவணனை சரமாரியாக தாக்கி மிரட்டியுள்ளார். இதில் காயமடைந்த சரவணன் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

கைது

பின்னர் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு சனிக்கிழமை வருகைதந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனிடம், பெட்ரோல் பங்க் ஊழியர் சரவணன், பாஸ்கர் தன்னை தாக்கிய கண்காணிப்பு கேமரா காட்சியுடன் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு குடியாத்தம் டவுன் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து பாஸ்கரை கைது செய்தனர். மேலும் அவருடைய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பெட்ரோல் பங்க் ஊழியர் சரவணனை, பாஸ்கர் தாக்கிய கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்