கை சின்னத்துக்கு ஆதரவு கேட்டுஇஸ்திரி போட்டு கொடுத்து வாக்கு சேகரித்த அமைச்சர் சி.வி.கணேசன்
அமைச்சர் சி.வி.கணேசன்;
ஈரோட்டில் கை சின்னத்துக்கு ஆதரவு கேட்டு இஸ்திரி போட்டு கொடுத்து அமைச்சர் சி.வி.கணேசன் வாக்கு சேகரித்தார்.
தேர்தல் பிரசாரம்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதியில் தினமும் வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்து வருகிறார்.
இந்தநிலையில் தி.மு.க. மாவட்ட பொருளாளர் பி.கே.பழனிசாமி தலைமையில் அமைச்சர் சி.வி.கணேசன், விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சியின் தலைவரும், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவருமான பொன்குமார் மற்றும் தி.மு.க.வினர் ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதியில் நேற்று மாலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஒவ்வொரு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து கை சின்னத்துக்கு வாக்குகளை சேகரித்தனர். மேலும், தி.மு.க. அரசால் கடந்த 1½ ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களின் வாசகங்கள் இடம்பெற்ற துண்டு பிரசுரங்களை வாக்காளர்களுக்கு வினியோகம் செய்தனர்.
இஸ்திரி போட்டார்
வீடு, வீடாக சென்றபோது பெண்கள் ஆரத்தி எடுத்து அமைச்சர் சி.வி.கணேசனை வரவேற்றனர். அப்போது அங்குள்ள ஒரு இஸ்திரி போடும் கடைக்கு சென்ற அமைச்சர், சட்டைக்கு இஸ்திரி போட்டு கொடுத்து வாக்குகளை சேகரித்தார். மேலும், சாலையோர வியாபாரிகளிடம் ஓட்டு சேகரித்த அமைச்சர் சி.வி.கணேசன் சில்லி சிக்கன் போட்டு கொடுத்து ஓட்டு கேட்டார்.
நம்பிக்கை
முன்னதாக பொன்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அமைப்பு சாரா, கட்டுமான தொழிலாளர்களுக்கு 20 மாத கால தி.மு.க. ஆட்சியில் செய்த நலத்திட்டங்களை எடுத்துக்கூறி, திண்ணை பிரசாரம் மேற்கொண்டு வருகிறோம். தி.மு.க. ஆட்சி அமைந்த பின் 20 லட்சம் தொழிலாளர்கள் வாரியத்தில் புதிதாக இணைந்துள்ளனர். இது தமிழக முதல்-அமைச்சர் மீது தொழிலாளர்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. இந்த தொகுதியில் 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெறுவார். அ.தி.மு.க., பா.ஜ.க.வின் முகமூடியாக களம் காண்கிறது.
தமிழக முதல்-அமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற உடன் தேர்தல் அறிக்கையில் அளித்த 70 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றி உள்ளார். மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு திட்டம், பெண்களுக்கு இலவச பஸ் வசதி, மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்ட ரூ.4 லட்சம் மானியம் போன்ற பெரிய திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். மக்கள் தெளிவாகத்தான் இருக்கின்றனர். குழப்பத்தின் உச்சத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளார். அவருக்கு வெற்றி பெற வேண்டும் என்பது நோக்கம் இல்லை. அ.தி.மு.க. அவரது கட்டுப்பாட்டில் இருப்பதை நிரூபிப்பதற்காகவே, அவர் இவ்வாறு ஆவேசமாக பேசுவதும், தேர்தல் களத்தில் நிற்பதுமாக இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.