இலவச வீட்டுமனை பட்டா கேட்டுமுடிதிருத்தும் தொழிலாளர்கள் மனு

கடமலைக்குண்டு பகுதியில் வசிக்கும் தங்களுக்கு இலவச வீட்டுமனைபட்டா கேட்டு முடிதிருத்தும் தொழிலாளர்கள், கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Update: 2023-08-28 21:45 GMT

இலவச வீட்டுமனை பட்டா

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு, மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள், குறைகள் தொடர்பாக மனுக்கள் கொடுத்தனர்.

அப்போது மனு கொடுப்பதற்காக தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம், முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்க மாவட்ட தலைவர் மனோகரன் தலைமையில், கடமலைக்குண்டு வட்டார பகுதியை சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளர்கள் ஏராளமானோர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களில் 48 பேர் தனித்தனியாகவும், சங்கத்தின் சார்பிலும் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், "கடமலைக்குண்டு பகுதியில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் 48 குடும்பத்தினர் வாழ்கிறோம். எங்களுக்கு சொந்த வீடோ, இடமோ இல்லை. எனவே, எங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

ஆக்கிரமிப்பு

இதேபோல் மாரியம்மன் கோவில்பட்டியை சேர்ந்த விஜய் என்பவர் கொடுத்த மனுவில், "தேனி நகரில் கம்பம் சாலை, மதுரை சாலை, பெரியகுளம் சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு நேரு சிலை சிக்னல் அருகில் நடந்த விபத்தில் ஒரு சிறுவனும், அவனுடைய தங்கையும் பலியானார்கள். விபத்தால் அவர்கள் இறந்ததற்கு அரசே பொறுப்பு ஏற்று நிவாரணம் வழங்க வேண்டும். இந்த 3 சாலைகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஆட்டோக்களை ஒழுங்குபடுத்த வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்