ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி கோப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைப்பு..!
ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி கோப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது.
சென்னை,
ஆக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை முதல் 12-ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மலேசியா, சீனா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன.
16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெறும் இந்த சர்வதேச ஆக்கி போட்டிக்காக எழும்பூர் ஸ்டேடியம் நவீன வசதிகளுடன் சர்வதேச தரத்தில் புதுப்பொலிவு பெற்றுள்ளது. போட்டிக்கான இறுதி கட்ட ஆயத்த பணிகளை போட்டி அமைப்பாளர்கள் செய்து வருகின்றனர். இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகள் தங்களை தயார்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வழங்கப்படும் வெற்றிக்கோப்பை தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொதுமக்கள் பார்வைக்காக கொண்டு செல்லப்பட்டது. குமரியில் இருந்து பல மாவட்டங்கள் வழியாக இன்று சென்னை வந்த ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி கோப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.