ஆலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி
கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது. மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சாம்பல் புதன் தின சிறப்பு திருப்பலி நடைபெற்றது. கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் நடந்த திருப்பலியில் ஆயர் நசரேன் சூசை கலந்து கொண்டார்.;
நாகர்கோவில்,
கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது. மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சாம்பல் புதன் தின சிறப்பு திருப்பலி நடைபெற்றது. கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் நடந்த திருப்பலியில் ஆயர் நசரேன் சூசை கலந்து கொண்டார்.
நோன்பு தொடங்கியது
உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஏசுவின் உயிர்ப்பு பெருவிழாவான ஈஸ்டர் பண்டிகையும் ஒன்று. இந்த ஈஸ்டர் பண்டிகைக்கு முன்பாக கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் நோன்பு கடைபிடிப்பது வழக்கம். கிறிஸ்தவர்கள் கடவுளாக வழிபடும் ஏசு கிறிஸ்து மனிதர்களை பாவங்களில் இருந்து மீட்பதற்காக சிலுவைப் பாடுகள் அனுபவித்து, சிலுவையில் அறையுண்டு மரித்தார். அதனை நினைவு கூறும் விதமாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் நோன்பு கடைபிடித்து, வறுமையில் உள்ளவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்வார்கள். எனவே இந்த நாட்களை அவர்கள் தவக்காலமாக கடைபிடித்து வருகிறார்கள்.
தவக்காலம் சாம்பல் புதன் தினத்தில் இருந்து தொடங்கும். இந்த ஆண்டுக்கான சாம்பல் புதன் நேற்று ஆகும். நேற்று முதல் கிறிஸ்தவர்கள் நோன்பை தொடங்கினார்கள். சாம்பல் புதன் தினத்தன்று கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்கள் அனைத்திலும் காலையில் சிறப்பு திருப்பலிகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்றும் குமரி மாவட்டம் முழுவதிலும் உள்ள ஆலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது.
நெற்றியில் சாம்பலால் சிலுவையிடல்
நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் காலை 6.30 மணிக்கு நடந்த சாம்பல் புதன் சிறப்புத் திருப்பலிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி திருப்பலியை நிறைவேற்றினார். அவருடன் கோட்டார் மறைமாவட்ட செயலாளர் அருட்பணியாளர் இம்மானுவேல்ராஜ், பொருளாளர் அருட்பணியாளர் அலோசியஸ் பென்சிகர், ஆயரின் செயலாளர் சகாய ஆன்றனி, கோட்டார் மறைவட்ட முதல்வர் அருட்பணியாளர் சகாய ஆனந்த், கோட்டார் புனித சவேரியார் பேராலய பங்குத்தந்தை ஸ்டேன்லி சகாயசீலன், இணை பங்குத்தந்தை ஆன்றோ ஜெராபின் ஆகியோர் இணைந்து திருப்பலியை நிறைவேற்றினர்.
திருப்பலியின்போது பங்கேற்ற கிறிஸ்தவர்கள் அனைவரது நெற்றியிலும் ஆயர் மற்றும் அருட்பணியாளர்கள் சாம்பலால் சிலுவை அடையாளம் வரைந்தனர். "மனிதனே நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய்" என்பதை உணர்த்தும் விதமாக சாம்பல் புதன் அன்று நடைபெறும் சிறப்புத் திருப்பலியில் இந்த சாம்பல் பூசப்படுகிறது.
மாவட்டம் முழுவதிலும்...
இதேபோல் நாகர்கோவில் ராமன்புதூர், கார்மல்நகர், புன்னைநகர், வெட்டூர்ணிமடம், வேப்பமூடு சந்திப்பு, வடசேரி, பார்வதிபுரம் உள்ளிட்ட நகரின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள், மாவட்டம் முழுவதிலும் உள்ள தக்கலை, குழித்துறை, மார்த்தாண்டம் மறைமாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நேற்று சாம்பல் புதன் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.
இதனால் காலையில் கிறிஸ்தவ ஆலயங்கள் அமைந்திருந்த பகுதிகள் அனைத்திலும் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
சி.எஸ்.ஐ. ஆலயங்கள்
இதேபோல் குமரி மாவட்டம் முழுவதிலும் உளள சி.எஸ்.ஐ. ஆலயங்களிலும் சாம்பல் புதன் தின சிறப்பு ஆராதனை மற்றும் வழிபாடுகள் நேற்று மாலையில் நடந்தது. குமரி சி.எஸ்.ஐ. பேராயர் ஏ.ஆர்.செல்லையா, பாம்பன்விளை ஆனந்தபுரம் சி.எஸ்.ஐ. சபையில் நடந்த சிறப்பு ஆராதனையில் பங்கேற்று ஆசி மறையுரை ஆற்றினார். தவக்காலத்தையொட்டி சுயவிருப்ப உண்டியல்கள் ஆலயங்களில் வழங்கப்பட்டது.
இந்த நோன்பு ஏசு சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளிக்கு அடுத்த சனிக்கிழமை வரை கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படும். ஏசு சிலுவையில் அறையப்பட்டு மரித்த மூன்றாம் நாளில் அதாவது புனித வெள்ளிக்குப்பிறகு வரும் ஞாயிற்றுக்கிழமையன்று கிறிஸ்தவர்களால் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படும்.