வீடுகளை காலி செய்ய ரெயில்வே நிர்வாகம் வலியுறுத்துவதால் மாற்று இடம் கேட்டு மக்கள் மனு
வீடுகளை காலி செய்ய ரெயில்வே நிர்வாகம் வலியுறுத்துவதால் மாற்று இடம் கேட்டு பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
தேனி ரெயில் நிலையம் அருகே உள்ள குட்செட் தெரு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியனிடம் அவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட 17-வது வார்டில் குட்செட் தெருவில் கடந்த 50 ஆண்டுகளாக 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இந்த நிலையில் தற்போது ரெயில்வே நிர்வாகத்தினர், அப்பகுதியில் நாங்கள் வசிக்கும் வீடுகளை காலி செய்யுமாறு வலியுறுத்தி வருகின்றனர். நாங்கள் கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வரும் சூழலில் திடீரென்று எங்களால் மாற்று இடத்துக்கு செல்ல முடியாத சூழல் உள்ளது. குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடு பெறுவதற்கு பங்களிப்புத் தொகையாக ரூ.2 லட்சத்து 49 ஆயிரம் செலுத்த வேண்டும் என்கிறார்கள். எங்களால் அவ்வளவு தொகை செலுத்த இயலாது. எங்களின் பொருளாதார நலன் கருதி தொகுப்பு வீடு அல்லது மாற்று இடம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.