கொடிக்கம்பம் நட முயன்றதால் பா.ஜ.க.வினர் போலீசார் இடையே தள்ளு முள்ளு

கொடிக்கம்பம் நட முயன்றதால் பா.ஜ.க.வினர் போலீசார் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.;

Update:2022-09-23 03:19 IST

கொடிக்கம்பம் நட எதிர்ப்பு

பிரதமர் நரேந்திரமோடியின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 17-ந் தேதி திருச்சி கருமண்டபம் ஜெயநகர், சக்திநகர் பகுதியில் பா.ஜ.க. சார்பில் கல்வெட்டு திறந்து கொடியேற்ற திட்டமிட்டனர். இதற்கு தி.மு.க. தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அங்கு இரு தரப்பினரும் திரண்டதால் அவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது குறித்து பா.ஜ.க. சார்பில் கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் தி.மு.க.வினர் மீது புகார் அளித்தனர்.

இந்தநிலையில் பா.ஜனதா சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம், மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் நேற்று காலை மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனை சந்தித்து தி.மு.க.வினர் மீது அளிக்கப்பட்ட புகார் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பா.ஜ.க.-போலீசார் இடையே தள்ளுமுள்ளு

பின்னர் அவர்கள் நிர்வாகிகளுடன் காரில் கருமண்டபம் ஜெயநகர், சக்திநகர் பகுதிக்கு சென்றனர். உடனே அங்கு போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரீதேவி, உதவி கமிஷனர் அஜய்தங்கம் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது அங்கு பா.ஜ.க.வினர் கொடிக்கம்பத்தை நட்டு கொடியேற்ற முயன்றனர். அவர்களிடம் பேசிய போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரீதேவி, இங்கு கொடியேற்ற அனுமதியில்லை என்று கூறினார்.

ஆனால் இதனை பா.ஜ.க.வினர் ஏற்க மறுத்தனர். அப்போது ஒரு சிலர் தூக்கி வந்த கொடிக்கம்பத்தை, போலீசார் பறித்து அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பா.ஜ.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

11 பேர் கைது

பின்னர் கட்சியின் கொடியை அந்த இடத்திலும், அருகே உள்ள மற்றொரு இடத்திலும் பா.ஜ.க.வினர் நட்டனர். உடனே போலீசார் அவர்களை கைது செய்வதாக தெரிவித்தனர். இதனால் போலீசாரை கண்டித்து பா.ஜ.க.வினர் கோஷம் எழுப்பினர். இதையடுத்து கட்சியின் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம், மாவட்ட தலைவர் ராஜசேகரன் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச்சென்று தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

பின்னர் சிறிதுநேரத்தில் அதேபகுதியில் தி.மு.க. கவுன்சிலர் ராமதாஸ், வட்ட செயலாளர் பி.ஆர்.பாலசுப்பிரமணியன் தலைமையில் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் திரண்டனர். இதைக்கண்ட போலீசார் தி.மு.க.வினரையும் அங்கிருந்து கலைந்து செல்லக்கூறி அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் கருமண்டபம் பகுதியில் நேற்று காலை சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்