5 சிவாலயங்களில் இருந்து நடராஜபெருமான் வீதிஉலா
ஆருத்ரா தரிசனத்தையொட்டி தஞ்சையில் 5 சிவாலயங்களில் இருந்து நடராஜபெருமான் வீதிஉலா நடந்தது. இதில் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.
ஆருத்ரா தரிசனத்தையொட்டி தஞ்சையில் 5 சிவாலயங்களில் இருந்து நடராஜபெருமான் வீதிஉலா நடந்தது. இதில் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.
ஆருத்ரா தரிசனம்
உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், வராகி அம்மன் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. இங்கு சிவகாமசுந்தரி சமேத நடராஜபெருமான், தனி சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.
நடராஜருக்கு ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர தினத்தன்று ஆருத்ரா தரிசனம் நடந்து வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, ஐம்பொன்னாலான நடராஜபெருமானுக்கு நேற்றுமுன்தினம் இரவு விபூதி, பால், தயிர், பழங்கள், மஞ்சள், திரவிய பொடி, சந்தனம் உள்ளிட்ட மங்கள பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வீதிஉலா
இதைத்தொடர்ந்து நேற்றுகாலை நடராஜபெருமானுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சிவகாமசுந்தரியுடன், நடராஜபொருமான் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் எழுந்தருளி 4 ராஜவீதிகளில் வீதிஉலா நடைபெற்றது. வீதிஉலாவின் போது பெரியகோவில் நடராஜபெருமானை தொடர்ந்து கொங்கனேஸ்வரர், சங்கர நாராயணன், காசிவிஸ்வநாதர், மணிக்கர்னேஸ்வரர் ஆகிய கோவில்களின் உற்சவ நடராஜபெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலாவில் பங்கேற்றனர்.
கொரோனாவுக்கு பின்னர் 3 ஆண்டுகள் கழித்து ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சுவாமி வீதிஉலா நடைபெற்றதால், பொதுமக்கள் தங்களது வீடுகளின் முன்பாக நின்று சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். வீதிஉலா முடிவடைந்து அந்தந்த கோவில்களுக்கு நடராஜபெருமான் சென்றதும், மும்மாரி மழை பொழிந்து விளைச்சல் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்று வேண்டி நெல்மணிகள் சுவாமி மீது தூவப்பட்டது.
தீர்த்தவாரி
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து அந்தந்த கோவில் குளங்களில் தீர்த்தவாரி நடைபெற்றது. முன்னதாக பெரியகோவிலில் சுவாமி புறப்பாடு தொடங்கிய போது நடனக் கலைஞர்கள் நாட்டியம் ஆடி நடராஜபெருமானை வழிபட்டனர்.