சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம்
சிவன்கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு மகா அபிஷேகம் நடைபெறும். இந்நிலையில் திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு கோவில் அபிஷேக மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு மேல் விபூதி, பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்பட பலவகையான மங்கள திரவியங்களால் மகாஅபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதனை தொடர்ந்து ஊடல் புராணம் நடைபெற்று திருவாதிரை நட்சத்திரமான நேற்று காலை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. ஊடல் உற்சவத்தையொட்டி நேற்று காலை 8.30 மணிக்கு உற்சவர் நடராஜரும், அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில் தனித்தனியே பல்லக்குகளில் எழுந்தருளி 4-ம் பிரகாரத்தில் வீதி உலா வந்தனர்.
அப்போது அம்பாள் பல்லக்கு முன்னே செல்ல, நடராஜர் பல்லக்கு பின்னே சென்றது. பின்னர் நடராஜரும், அம்பாளுக்கும் சேர்த்து ஆருத்ரா மகாதரிசனம் மற்றும் மகாதீபாரதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி, அம்பாளை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவிஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
முசிறி
முசிறி அண்ணாமலையார் கோவிலில். ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு அண்ணாமலையார் மற்றும் நடராஜர பெருமான், சிவகாமிக்கு 27 வகையான அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கும், அம்பாளுக்கும் மகாதீபாராதனை காட்டப்பட்டன. தொடர்ந்து வீதி உலா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர்.
மண்ணச்சநல்லூர்
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் நேற்று காலை நடராஜர், சிவகாமி, மாணிக்கவாசகர் ஆகிய சாமிகளுக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர். இதேபோல், மண்ணச்சநல்லூரில் உள்ள பூமிநாதர்சாமி கோவிலில் உள்ள நடராஜருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகமும் நடைபெற்றது. இதேபோல் திருப்பட்டூரில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவிலிலும் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார மக்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
லால்குடி
லால்குடி சப்தரீஷ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜர் வீதி உலா, நடராஜர் திருநடனக்காட்சி நடந்தது. விழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தா.பேட்டை
தா.பேட்டை காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜர், சிவகாமசுந்தரி, மாணிக்கவாசகர் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அப்போது பால், தயிர், இளநீர், தேன், திருமஞ்சனம், அரிசிமாவு, பழ வகைகள் உள்பட 21 வகையான பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
காட்டுப்புத்தூர்
காட்டுப்புத்தூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் உற்சவர் நடராஜபெருமான், சிவகாமி தாயார் உற்சவத்திற்கு 27 விதமான அபிஷேகங்கள் நடைபெற்றன. இதனையடுத்து மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.