பள்ளி மாணவர்களுக்கு கலை போட்டிகள்
கூடலூர் கல்வி மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு கலை போட்டிகள் நடைபெற்றது. இதில் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர்.;
கூடலூர்,
கூடலூர் கல்வி மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு கலை போட்டிகள் நடைபெற்றது. இதில் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர்.
கலைத்திருவிழா
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவர்களின் கலைத்திறன் மற்றும் திறமையை வெளிப்படுத்த கலைத் திருவிழா நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. இதையொட்டி கடந்த மாதம் 23-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடுநிலைப் பள்ளிகளில் கலைத்திருவிழா நடத்தப்பட்டு மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தொடர்ந்து அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு கலைத்திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. கூடலூர் கல்வி மாவட்ட அளவில் கலைத்திருவிழா கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் 18 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் கனியன் கூத்து, கரகாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், கோலாட்டம், பொம்மலாட்டம் மற்றும் நாட்டுப்புறம், செவ்வியல் நடனங்கள், பிற மாநில, மேற்கத்திய நடனங்கள் நடைபெற்றது.
திறமைகளை வெளிப்படுத்தினர்
இது தவிர பேண்ட் வாத்தியங்கள், தாரை தப்பட்டைகள் உள்ளிட்ட இசைக்கருவிகளை ஒவ்வொரு பள்ளி மாணவர்களும் இசைத்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர். முன்னதாக விழாவை போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார் தொடங்கி வைத்தார். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜெயக்குமார், வட்டார கல்வி அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். தலைமை ஆசிரியர் அய்யப்பன் வரவேற்றார்.
கலைத்திருவிழாவில் மாணவிகள் நாட்டுப்புற மற்றும் மேற்கத்திய, வெளிமாநில நடனங்கள் ஆடி தங்களது திறமையை வெளிப்படுத்தினர். தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) உயர்நிலை மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. இதுகுறித்து ஆசிரியர்கள் கூறும்போது, கல்வி மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகள் மாவட்ட அளவிலான கலைத்திருவிழாவில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள். பின்னர் மாவட்ட போட்டியில் வெற்றி பெற்றால் மாநில அளவிலான கலைத் திருவிழாவில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர். இதே போல் குன்னூர் கல்வி மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டது.