காதல் மனைவியை வெட்டிக்கொன்ற கணவர் கைது
திருவேங்கடம் அருகே காதல் மனைவியை வெட்டிக்கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார். அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருவேங்கடம்:
திருவேங்கடம் அருகே காதல் மனைவியை வெட்டிக்கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார். அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
பெண் வெட்டிக்கொலை
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள வடக்கு அழகுநாச்சியார்புரம் கிராமத்தை சேர்ந்தவர் மகாகிருஷ்ணன் (வயது 35). வேன் டிரைவரான இவரது மனைவி கனகாதேவி (32). இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஊரில் உள்ள ஒரு தோட்டத்தில் கனகாதேவி வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருவேங்கடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் கனகாதேவியை அவரது கணவரே கொலை செய்தது தெரியவந்தது.
கணவர் கைது
இதையடுத்து தலைமறைவாக இருந்த மகாகிருஷ்ணனை பிடிக்க சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுதிர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் பல்வேறு இடங்களில் அவரை தேடினர். மகாகிருஷ்ணன் செல்போன் சிக்னலை போலீசார் ஆய்வு செய்தபோது, அவர் மதுரை பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று, மகாகிருஷ்ணனை கைது செய்து அழைத்து வந்தனர்.
பரபரப்பு வாக்குமூலம்
தொடர்ந்து அவர் போலீசிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் கூறிருப்பதாவது:-
நானும் கனகாதேவியும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ஒருவர் மீது ஒருவருக்கு நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதன்காரணமாக எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 2 பேருமே கடந்த இரண்டு வருடங்களாக ஒரே வீட்டில் வசித்தாலும் பிரிந்து வாழ்ந்து வந்தோம்.
சம்பவத்தன்று நள்ளிரவில் எனது மனைவிக்கு ஒரு போன் வந்தது. உடனே அவர் போனை எடுத்துக் கொண்டு காட்டுப்பகுதிக்குள் சென்றார். சிறிது நேரம் கழித்து நான் அவளை தேடி சென்றேன். அப்போது, எனக்குள் ஏற்பட சந்தேகத்தால் அவரிடம் வாக்குவாதம் செய்தேன். இதனால் ஆத்திரம் ஏற்பட்டு நான் ஏற்கனவே எடுத்துச் சென்ற அரிவாளால் கனகாதேவியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தேன்.
மிளகாய் பொடி
போலீசார் மோப்பநாய் மூலம் கண்டுபிடித்து விடுவார்கள் என கருதி வீட்டில் இந்த மிளகாய் பொடி எடுத்து வந்து அந்த பகுதி முழுவதும் தூவி விட்டு சென்றேன். அங்கிருந்து தப்பி திருப்பூருக்கு சென்று விட்டேன். அங்கிருந்து மீண்டும் நெல்லை செல்வதற்காக பஸ்சில் வந்த போது மதுரை அருகில் வைத்து போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு மகாகிருஷ்ணன் வாக்குமூலம் அளித்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.