போலீஸ் என கூறி காதல் ஜோடியிடம் கைவரிசை காட்டியவர் கைது
போலீஸ் என கூறி காதல் ஜோடிகளை குறி வைத்து கைவரிசை காட்டியவர் கைதானார். நகையை விற்று துணை நடிகைகளிடம் உல்லாசம் அனுபவித்தது அம்பலமானது.
பூந்தமல்லி,
பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் காரில் தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்த மருத்துவக்கல்லூரி மாணவியிடம் போலீஸ் என கூறிய நபர் ஒருவர் 4 பவுன் நகைகளையும், அதே போல் வெள்ளவேடு பகுதியில் காரில் பேசி கொண்டிருந்த மற்றொரு ஜோடியிடம் 6 பவுன் நகையும் பறித்து சென்றதாக பூந்தமல்லி போலீசாருக்கு புகார்கள் வந்தன.
அதன் பேரில், பூந்தமல்லி உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டி தலைமையில் தனிப்படைகள் அமைத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர்.
மேலும் அந்த நபரை பிடிக்க காதல் ஜோடிகள் போன்று மாறுவேடத்தில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
நடிகைகளிடம் உல்லாசம்
அப்போது அங்கு நகை பறிக்க வந்த மர்ம நபரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிடிபட்ட நபர் சிவராமன் (வயது 38) என்பதும், இவர் நெடுஞ்சாலைகளில் காரில் அமர்ந்திருக்கும் ஜோடிகளிடம் தான் போலீஸ் என கூறி மிரட்டி நகை பறித்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், காதல் ஜோடிகளிடம் பறித்த நகைகளை விற்பனை செய்து துணை நடிகைகளிடம் உல்லாசம் அனுபவித்து வந்ததும் அம்பலமானது.
இவர் மீது செங்கல்பட்டு, தாம்பரம், கடலூர், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் இதுபோன்ற 45 வழக்குகள் இருப்பது உறுதியானது.
இவரிடம் இருந்து 19 பவுன் நகைகளை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.