சிறுவர்களுக்கு போதை மாத்திரை விற்றவர் கைது
தென்காசியில் சிறுவர்களுக்கு போதை மாத்திரை விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசியில் சிறுவர்களுக்கு போதை மாத்திரை விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
போதை மாத்திரை
தமிழகத்தில் விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்த பலர் உயிரிழந்த நிலையில், மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். தென்காசி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் தென்காசி வாலியன்பொத்தை பகுதியைச் சேர்ந்த 4 சிறுவர்கள் போதை மாத்திரைகள் சாப்பிட்டதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
கைது
இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்பிரிவு போலீஸ்காரர் ஆனந்தராஜ், போலீஸ்காரர்கள் செந்தில்வேலன், கார்த்திக் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில், சிறுவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்தது தென்காசி எல்.ஆர்.எஸ்.பாளையத்தைச் சேர்ந்த வேலுமணி மகன் காசிராஜன் (வயது 40) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே போதை மாத்திரை சாப்பிட்டதால் பாதிக்கப்பட்ட 4 சிறுவர்களும் குணமடைந்து வீடு திரும்பினர். தொடர்ந்து போதைப்பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.