நிதி நிறுவனங்களில் போலி நகையை அடமானம் வைத்த ஆசாமி கைது

குமரியில் நிதி நிறுவனங்களில் போலி நகையை அடமானம் வைத்த ஆசாமி கைது செய்யப்பட்டார். அவர் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்தது அம்பலமானது.;

Update:2022-06-16 23:33 IST

தக்கலை. 

குமரியில் நிதி நிறுவனங்களில் போலி நகையை அடமானம் வைத்த ஆசாமி கைது செய்யப்பட்டார். அவர் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்தது அம்பலமானது.

தம்பதி

நாகர்கோவில் செட்டிக்குளம் 3-வது தெருவில் வசிப்பவர் ஜேசுராஜா (வயது 48). இவருடைய முதல் மனைவியான மீனா (38) என்பவரை விவாகரத்து செய்து விட்டு மார்த்தாண்டம் அருகே உள்ள கழுவன்திட்டையை சேர்ந்த அனு என்ற அனுஷாவை (32) 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் கடந்த 6-ந் தேதி கருங்கலுக்கு காரில் சென்று, நகையை அடமானம் வைக்கும் ஒரு நிறுவனம் முன்பு காரை நிறுத்தியுள்ளனர். பின்னர் காரில் இருந்து வெளியே வந்த அனுஷா மட்டும் நிறுவனத்துக்குள் நுழைந்து 9 கிராம் எடையுடைய 2 காப்புகளை அடமானம் வைத்து ரூ.60 ஆயிரம் பெற்றுள்ளார்.

போலி நகை

ஆனால் நகையை வாங்கிய உரிமையாளருக்கு போலி நகையாக இருக்குமோ என சந்தேகம் ஏற்பட்டது. நகையை உரசி பார்த்ததில் அசல் போலவே இருந்துள்ளது. ஆனாலும் நகையின் வடிவம் அவருக்கு தொடர்ந்து சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகையை வெட்டி பார்க்க உரிமையாளர் முடிவு செய்தார். அதன்படி வெட்டி பார்த்த போது மேல்பகுதியில் தங்கமும், உள்பகுதி முழுவதும் செம்பாக இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

போலீசில் புகார்

உடனே தான் ஏமாற்றப்பட்டது போல் மற்றவர்களும் ஏமாந்திருப்பார்களோ என்ற சந்தேகத்தில் நகை அடமான கடை நடத்துவர்களுக்கான வாட்ஸ்-அப் குரூப்பில் நகையின் படத்தை போட்டு விவரத்தை அதில் கூறியிருந்தார்.

இதை பார்த்த தேங்காப்பட்டணம், பைங்குளம் பகுதியில் உள்ளவர்கள் இதேபோன்று தங்கள் கடையிலும் ஒரு பெண் அடமானம் வைத்தாரே என நகைகளை சோதித்து பார்த்ததில் தாங்களும் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர்.

உடனே இதுகுறித்து கருங்கல், புதுக்கடை போலீஸ் நிலையங்களில் புகார் கொடுத்தனர். இதனால் போலி நகையை அடமானம் வைத்து பணம் மோசடி செய்த தம்பதியை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

கணவர் பிடிபட்டார்

இந்தநிலையில் கணவன், மனைவி இருவரும் குமாராபுரம் அருகே உள்ள சித்திரங்கோட்டில் சுரேஷ் என்பவரின் அடமான கடையில் பெண் ஒருவர் 10 கிராம் எடை கொண்ட காப்பை அடமானம் வைத்து பணம் பெற்றார்.

இதற்கிடையே வாட்ஸ்-அப் குரூப் தகவலை பார்த்து சுரேஷ் நகையை பரிசோதித்து பார்த்த போது போலி நகை என தெரியவந்தது. அதே சமயத்தில் கார் நம்பர் பற்றிய தகவல் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

அதனை வைத்து கொற்றிக்கோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரசல் ராஜ் விசாரணை நடத்தினார். மேலும் நேற்று மதியம் 2 மணிக்கு வேர்க்கிளம்பி பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்திய போது, நாகர்கோவில் செட்டிகுளத்தை சேர்ந்த ஜேசுராஜா என்பதும், போலி நகையை வைத்து லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்தவர் என்பதும் தெரியவந்தது.

பின்னர் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், போலி நகையை அடமானம் வைத்த நிறுவனங்களில் போலி பெயர்களை பதிவு செய்து மனைவியுடன் சேர்ந்து லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. பின்னர் அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

பரபரப்பு

மேலும் இவர் வேறு எங்கெல்லாம் நகையை அடமானம் வைத்துள்ளார், ஒரே மாதிரியான போலி தங்க காப்பினை செய்து கொடுத்தது யார்? இந்த மோசடியில் கும்பலாக செயல்படுகிறார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஜேசுராஜின் மனைவி அனுஷாவை பிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்