வேறொருவர் வீட்டை குத்தகைக்கு விட்டு ரூ.25 லட்சம் மோசடி செய்தவர் கைது

வேறொருவர் வீட்டை குத்தகைக்கு விட்டு ரூ.25 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-01-13 13:19 IST

சென்னை கோடம்பாக்கம் கங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சமீர் அலி. இவருக்கு ஓட்டேரி சுப்புராயன் தெருவில் சொந்தமாக 14 வீடுகள் உள்ளன. அதில் ஒரு வீட்டில் வசித்து வருபவர் சங்கர் (வயது 45). இவர், 'ஜல்லிக்கட்டு' என்ற பெயரில் டிபன் கடை நடத்தி வருவதால் 'ஜல்லிக்கட்டு' சங்கர் என்று அப்பகுதியில் அழைக்கப்பட்டார்.

இந்த 14 வீடுகளில் வரும் வாடகையை சங்கர் மொத்தமாக வசூல் செய்து சமீர் அலியிடம் தருவது வழக்கம். கடந்த சில மாதங்களாக சமீர் அலிக்கு வாடகை பணம் தராமல் சங்கர் ஏமாற்றி வந்தார்.

இது குறித்து சமீர் அலி நேரடியாக சென்று தனது வீட்டில் உள்ள வாடகைதாரர்களிடம் விசாரித்தார். அப்போது சங்கர், தனது வீட்டை வாடகைக்கு விடாமல் சிலருக்கு குத்தகைக்கு விட்டு ரூ.25 லட்சம் வரை வாங்கி மோசடி செய்திருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து சமீர் அலி கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தலைமைச் செயலக காலனி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

விசாரணையில் வாடகைதாரர்கள் மட்டுமின்றி அப்பகுதியில் உள்ளவர்களிடமும் சங்கர் பல லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று சங்கரை போலீசார் கைது செய்தனர்.

தி.மு.க. நிர்வாகியான சங்கர் மீது தொடர்ந்து புகார்கள் வந்ததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்