கறி விருந்துடன் சூதாடிய பா.ஜ.க., ம.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட 24 பேர் கைது

வேடசந்தூர் அருகே, கறி விருந்துடன் சூதாடிய பா.ஜ.க., ம.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட 24 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-04-23 21:00 GMT

வேடசந்தூர் அருகே, கறி விருந்துடன் சூதாடிய பா.ஜ.க., ம.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட 24 பேர் கைது செய்யப்பட்டனர்.

கறி விருந்துடன் சூதாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில் கருக்காம்பட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள ஒரு கட்டிடத்தில் பணம் வைத்து சிலர் சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் வேல்மணி ஆகியோர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். மேலும் அவர்களுடன் நெடுஞ்சாலை ரோந்து போலீசாரும் சென்றனர்.

அப்போது அங்குள்ள 2 மாடி கட்டிடத்தின் தரை தளத்தில் ஒரு அறையில் சிலர் கறி விருந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். மற்றொரு அறையில் மேலும் சிலர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர். இதனைக்கண்ட போலீசார், அந்த கும்பலை சுற்றிவளைத்து பிடித்தனர். அங்கு மொத்தம் 24 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

பா.ஜ.க., ம.தி.மு.க. நிர்வாகிகள்

விசாரணையில், அந்த கட்டிடத்தில் மனமகிழ் மன்றம் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இங்கு தற்போது பிடிபட்ட கும்பலை சேர்ந்தவர்கள், வாரம் ஒருமுறை பணம் வைத்து சூதாடி வந்துள்ளனர். மேலும் அவர்கள் கிடா விருந்தும் நடத்தியுள்ளனர்.

அந்த வகையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் 24 பேரும் இங்கு கூடி கிடா விருந்துடன், சூதாடியது தெரியவந்தது. இதையடுத்து பணம் வைத்து சூதாடிய வேடசந்தூர் அய்யனார்புரத்தை சேர்ந்த தண்டபாணி, வேடசந்தூர் ஒன்றிய பா.ஜ.க. செயலாளர் சந்திரசேகர், வேடசந்தூர் ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் சக்திவேல், பழனியை சேர்ந்த தாசமுத்து, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த புவனேசுவரன் உள்பட 24 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம், சீட்டுக்கட்டுகள், டோக்கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கிடா விருந்துடன் பணம் வைத்து சூதாடிய சம்பவம் வேடசந்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்