ரூ.25 ஆயிரத்துக்கு திருப்பூர் தம்பதிக்கு விற்ற கொடூர தாய் கைது

கிருஷ்ணகிரியில் குழந்தை கடத்தலில் திடீர் திருப்பமாக அவரது தாய், அந்த குழந்தையை திருப்பூர் தம்பதிக்கு ரூ.25 ஆயிரத்துக்கு விற்றுள்ளார். கைதான அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2022-12-16 18:45 GMT

கிருஷ்ணகிரியில் குழந்தை கடத்தலில் திடீர் திருப்பமாக அவரது தாய், அந்த குழந்தையை திருப்பூர் தம்பதிக்கு ரூ.25 ஆயிரத்துக்கு விற்றுள்ளார். கைதான அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

குழந்தை மாயம்

கிருஷ்ணகிரி அருகே உள்ள மாதேப்பட்டியை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 35). இவர், கடந்த 12-ந் தேதி 8 மாத ஆண் குழந்தையுடன் கிருஷ்ணகிரிக்கு வந்தார். மதியம் பஸ் நிலையம் சென்ற அவர், குழந்தையை கழிப்பறை முன் படுக்க வைத்துவிட்டு இயற்கை உபாதை கழிக்க சென்றதாகவும், மீண்டும் வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை என்றும், மர்மநபர்கள் குழந்தையை கடத்தி சென்றதாக கூறினார்.

அது தொடர்பாக தனலட்சுமியின் கணவர் வெங்கடேசன் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக தனலட்சுமியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது குழந்தையை கழிப்பறை முன்பாக வைத்து விட்டு சென்றதாகவும், பின்னர் படுக்க வைத்து சென்றதாகவும் அவர் மாறி, மாறி கூறினார்.

பணத்திற்காக விற்பனை

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு பெண்ணும், ஆணும் தனலட்சுமியுடன் வந்து பேசுவதும், பின்னர் குழந்தையை அவர்கள் வாங்கி செல்வதும் பதிவாகி இருந்தது. இதைத் தொடர்ந்து தனலட்சுமியிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். அதில் முகநூலில் வந்த பதிவை பார்த்து குழந்தையை பணத்திற்காக விற்றதை தனலட்சுமி ஒப்புக் கொண்டார். அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அது குறித்து போலீசார் கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை சேர்ந்தவர் உதயா (37), இவரது மனைவி சுமதி (32). இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இதனால் தங்களுக்கு குழந்தை வேண்டும். அதற்காக பணம் தருகிறோம் என்று தங்களின் செல்போன் எண்ணுடன் சமூக வலைத்தளமான முகநூலில் (பேஸ்புக்) பதிவு செய்திருந்தனர். அவர்களின் முகநூல் பதிவை தனலட்சுமி பார்த்துள்ளார்.

நாடகம்

இந்த நிலையில் தனலட்சுமிக்கு ஏற்கனவே கமலினி (8) என்ற பெண் குழந்தையும், ராம்பிரசாத் (4) என்ற ஆண் குழந்தையும் உள்ளதால் 3-வதாக பிறந்து தற்போது 8 மாதமாக உள்ள ஆண் குழந்தையை வளர்க்க தனலட்சுமிக்கு மனமில்லை. தனது குழந்தையை பணத்திற்கு விற்று விடலாம் என்று திட்டமிட்ட தனலட்சுமி முகநூலில் குறிப்பிட்டிருந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது ரூ.25 ஆயிரத்துக்கு குழந்தையை வாங்கி கொள்வதாக அவர்கள் கூறியதையடுத்து, தனது குடும்பத்தினரிடம், கிருஷ்ணகிரிக்கு சென்று வருவதாக கூறி விட்டு குழந்தையுடன் தனலட்சுமி வந்தார். பின்னர் பஸ் நிலையத்தில் திருப்பூர் தம்பதியிடம் குழந்தையை கொடுத்து விட்டு ரூ.25 ஆயிரத்தை வாங்கினார். பிறகு தனது குழந்தையை யாரோ கடத்தி சென்று விட்டார்கள் என தனலட்சுமி நாடகமாடி உள்ளார்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

3 பேர் கைது

இதையடுத்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் சென்று அந்த குழந்தையை மீட்டனர். மேலும் குழந்தையை வாங்கிய உதயா-சுமதி தம்பதி மற்றும் குழந்தையை விற்ற கொடூர நெஞ்சம் படைத்த தாய் தனலட்சுமி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்று கிருஷ்ணகிரி டவுன் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 8 மாத குழந்தையை அதன் தாயே பணத்திற்காக விற்ற சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்